கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் வெற்றிப் படம் கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். இரும்புத்திரை, மருது என விரல் விட்டு எண்ணிக்கொள்ளும் வகையிலேயே அவரது ஹிட் லிஸ்ட்கள் இருந்தன. அதுவும் சமீபத்தில், அவர் நடித்த எந்த திரைப்படங்களுமே வெற்றி பெறவில்லை. இதனால் மார்க்கெட்டை இழந்து பரிதாபமான நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இப்படியான சூழல்தான் விஷாலிற்கு எதிர்பாராத வெற்றியை கொடுத்தது மார்க் ஆண்டனி திரைப்படம்.
திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை எடுத்ததால் இதன் மீது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் டைம் லுக் என்னும் கான்செப்ட்டை வைத்து இயக்குனர் கையாண்ட திரை மொழி, மற்றும் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்ததால் மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட அந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.
எதிர்பாராத இந்த வெற்றியால் படக் குழுவினரே திக்கு முக்காடி போகினர். மார்க் ஆண்டனி கொடுத்திருக்கும் வெற்றியால் உற்சாகமடைந்து இருக்கும் விஷால், அடுத்ததாக ரத்னம் என்னும் படத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட சுற்று வட்டார பகுதிகளை கதைக்களமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் சூழலில் விஷாலும் அந்த யோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சென்னை ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விஷால் விண்ணப்பித்தார். ஆனால் அவரது விண்ணப்ப படிவம் கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது.
இப்படியான சூழலில், அரசியலுக்கு வருவது குறித்து பேசி இருக்கும் விஷால், காலம் தான் முடிவு செய்யும் என்றும், தேவைப்பட்டால் மக்களுக்காக குரல் கொடுப்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், விஷால் அரசியலுக்கு வருவது குறித்து அவரது தந்தை ஜிகே ரெட்டி பேசி இருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,
விஷால் சிறுவயதிலிருந்தே ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பான். தன்னிடம் காசு இல்லை என்றாலும் பிறரிடம் இருந்து கடன் வாங்கி அவன் உதவி செய்வான். ஆனால் இப்போது அவன் விஜய் அஜித் சூர்யா மாதிரி நிறைய சம்பாதிக்க வேண்டும். பிறகு திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும். அதையடுத்து அவன் சம்பாதித்த பணத்தை கொண்டு அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.





