நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருக்கிறார். நல்ல வெற்றி படங்களை தந்திருக்கிறார். ஜெயம், போகன், தனி ஒருவன். சந்தோஷ் சுப்ரமணியம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தீபாவளி என பல நல்ல படங்களில் நடித்தவர். பொன்னியின் செல்வன் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வருகிறார். குறிப்பாக அகிலன், இறைவன் போன்ற படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிளாப் படங்களாக மாறிவிட்டன. இப்போது சைரன் என்ற படத்தில் ஜெயம் ரவி – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படம் நேற்றுதான் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், மதுரையில் உள்ள சினிப்பிரியா தியேட்டரில் தனது ரசிகர்களுடன் சேர்ந்து, சைரன் படத்தை பார்த்த ஜெயம் ரவி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரசிகர்களின் விருப்பத்துக்காக மதுரைக்கு வந்து, அவர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்தேன். சைரன் படத்தை ரசிகர்கள் கைதட்டி ரசிகர்கள் ரசித்து பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது டைரக்டர் ஆண்டனி பாக்யராஜூக்கு கிடைத்த வெற்றி. இந்த படத்தில் நடித்தது திருப்தியான உணர்வை தருகிறது.
தொடர்ந்து ஜெயம் ரவி கூறுகையில்,நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும். அதற்கான பணிகளில் திரையுலக நண்பர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
விஜய்க்கு அரசியலில் ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, என்னுடைய வட்டம் மிக குறுகிய வட்டம். சினிமா மட்டுமே எனக்கு தெரியும். விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா என்ற அடுத்த கேள்விக்கு, அவர் அழைத்தால், விஜய் அண்ணன் அழைப்பு விடுத்தால், அவரது வீட்டுக்கு வேண்டுமானால் சென்று வரலாம் என்று குறிப்பிட்டார்.
மேலும் விஜய் அரசியல் பயணத்துக்காக சினிமாவில் நடிப்பதையே நிறுத்தி விட்டாலும், அவரது விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் கூறிய ஜெயம் ரவி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். விஜய் அரசியலுக்கு அழைத்தால், வீட்டுக்கு வேண்டுமானால் சென்று வரலாம் என ஜெயம் ரவி கிண்டலாக கூறியது, விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





