இந்திய அளவில் அதிகம் வியாபாரம் நடக்கக்கூடிய ஹீரோகளில் ஒருவர் விஜய். அவரது ஒவ்வொரு படமும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை வசூலித்துவிடும் என கூறப்படுகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான் வாரிசு படம் கலவையான விமர்சனங்களைத்தான் பெற்றது. ஆனால் உலக அளவில் 300 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்படி முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய் ஆரம்பத்தில் கமர்ஷியல் ஹீரோவெல்லாம் இல்லை. அப்போதெல்லாம் அவருக்கு கைக்கொடுத்தது காதல் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் படங்கள்தான். அந்த ஜானர் படங்களை வைத்துதான் விஜய் என்னும் விதை வளர ஆரம்பித்தது. அதேபோல் இந்திய சினிமாவில் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படும் சிவாஜியுடன் நடிப்பதற்கனா வாய்ப்பு விஜய் காலத்து இளம் ஹீரோக்கள் பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.
ஆனால் விஜய்க்கு அது ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் அமைந்தது. அதனைப் பார்த்து அப்போதைய கோலிவுட் ஆச்சரியம்தான் பட்டது. அதேசமயம் சிவாஜிக்கு விஜய் ஈடுகொடுத்து நடித்துவிடுவாரா என்ற கேள்வியையும் அப்போது பலர் முன்வைத்தனர். ஆனால் அந்தப் படத்தில் விஜய் தனது நடிப்பை நல்லவிதமாகவே வெளிப்படுத்தி ஃபைன் ஆக்டர் என்ற பெயரை பெற்றார். இந்தச் சூழலில் ஒன்ஸ்மோர் படத்தில் விஜய் நடிக்க பயந்தது குறித்து தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டி ஒன்றில், “ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜியுடன் நடிப்பதற்கு விஜய் ரொம்பவே பயந்தார். தனது அப்பாவிடம் சென்று நான் எப்படி அவருடன் நடிப்பது என பயந்தபடி கேட்டார். அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரோ அதெல்லாம் ஒன்னும் இல்லடா நீ தைரியமா நடி என தெம்பு ஊட்டினார். இருந்தாலும் விஜய்க்கு சிவாஜியுடன் நடிப்பது பற்றிய பயம் போகவே இல்லை.
ஒருவழியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றபோது சிவாஜி விஜய்யிடம் நீதான் சந்திரசேகர் பையனாடா. என்ன பண்ற டான்ஸ் எல்லாம் எங்க கத்துக்குற என விசாரித்தார். அதுமாதிரி கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் விஜய்யுடன் சிவாஜி பேசிக்கொண்டே இருந்தார். அந்த நாட்களில் ஷூட்டிங்கே நடக்கவில்லை. ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரோ ஒரு நாளைக்கு எட்டு சீன்கள் எடுக்கக்கூடிய அளவு வேகமான இயக்குநர். அவரால் சிவாஜி விஜய் பேச்சை நிறுத்தவும் முடியவில்லை.
இதனை பார்த்த சிவாஜி கணேசன் டேய் சந்துரு (எஸ்.ஏ.சியை சிவாஜி அப்படித்தான் அழைப்பார்) ஒன்னும் இல்லடா அவனை கொஞ்சம் என்னோட நெருக்கம் ஆக்குனேன் அதான். நாளைலேர்ந்து ஷூட்டிங்கை வை என்றார். அதன் பிறகு விஜய்க்கு இன்னொரு பயம் வந்திருக்கிறது. அது என்னவென்றால் சிவாஜி எதுவாக இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார்.
அதனால் நாம் ஒன் மோர் டேக் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அப்பொதும் ஒரு சில சீன்கள் ஒன்மோர் போய்விட்டது. உடனே விஜய் பயந்தார். ஆனால் சிவாஜியோ டேய் எனக்கு இதெல்லாம் ஊறிப்போச்சு. 20 டேக்குகள்கூட நான் நடிப்பேன். நீ நடி. அப்போதானே நல்லா வரும் என சொல்லியிருக்கிறார்”என்று செய்யாறு பாலு அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.





