டைரக்டர் பாலா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். சேது படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா, பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இயக்குநர் பாலாவிடம் துவக்கத்தில் அமீர், சசிக்குமார் போன்றவர்களும் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள்.
நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி, நான் கடவுள், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல வித்யாசமான படைப்புகளை தந்தவர். பாலா படங்களில் நடிப்பது என்பது, அந்த கதாநாயகன்களுக்கு மறுவாழ்வு என்பது போல அவர்களது திரை பயணத்தில் அடுத்தடுத்த நிலைக்கு செல்வார்கள். அப்படிதான் சியான் விக்ரம், சூர்யா நடித்த படங்கள் அமைந்தன.
டைரக்டர் பாலா, மற்ற இயக்குநர்களை போல ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்துக்கொள்ள மாட்டார். அவருக்கு ஹீரோ, ஹீரோயின் என்ற மரியாதை, கண்ணோட்டம் இல்லாமல் தன்னிடம் பணிபுரியும் வேலை ஆட்களை போல தான் நடத்துவார். ஒருமையில்தான் பேசுவார். பரதேசி படத்தில் நடித்த போது நடிகர் அதர்வாவை பலமுறை குச்சியால் அடித்திருக்கிறார்.
இதனால் மனம் வெறுத்துப் போன அதர்வா, இனிமேல் எந்த சூழ்நிலையிலும் டைரக்டர் பாலா படத்தில் நடிக்க மாட்டேன் என்று அங்கிருந்த தனது உதவியாளர்களிடம் கூறியிருக்கிறார். அதே போல் அந்த படத்தில் நடித்த வேதிகாவும் ஒரு கட்டத்தில் டைரக்டர் பாலா செய்த டார்ச்சரால் நொந்து போய் இருக்கிறார்.
சமீபத்தில் வணங்கான் படத்தில் நடித்த மலையாள நடிகை மமிதா பைஜூ, தன்னை பாலா தோள்பட்டையில் தாக்கியதாக கூறி, அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இந்த சூழலில் தாரை தப்பட்டை படத்தில் நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமார், டைரக்டர் பாலா படத்தில் நடித்த போது தனக்கு எலும்பே நொறுங்கி விட்டதாக கூறியிருக்கிறார்.
அந்த படத்தில் ஒரு காட்சியில், படத்தின் வில்லன் ஆர்கே சுரேஷ் என்னை மிதிக்க வேண்டும். அந்த காட்சியில் அவரை மிக ஆக்ரோஷமாக பாலா, என்னை மிதிக்க சொன்னார். அவர் அப்படி மிதித்ததில் என் நெஞ்சு பகுதியில் எலும்பு நொறுங்கும் சத்தம் கேட்டது. எனினும் வலிக்கிறது என்றால் மீண்டும் கட் சொல்லி நடிக்க சொல்வார் என்பதால் அமைதியாக இருந்து விட்டேன். பின் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது, எலும்பு நொறுங்கியிருந்தது என்று கூறியிருக்கிறார்.





