கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. உலகளவில் ரூ.400 கோடிகளுக்கும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாக இது அமைந்தது. இதில் கமல்ஹாசனுடன் நடித்திருந்த பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் மிகவும் மாஸ் ஆக வலம் வந்தனர். குறிப்பாக விஜய் சேதுபதி ஏற்று நடித்திருந்த சந்தனம் கதாபாத்திரம் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரமாக அமைந்துள்ளது.

அதே போல் “விக்ரம்” திரைப்படத்தில் வசந்தி ஏற்று நடித்திருந்த ஏஜென்ட் டீனா கதாபாத்திரமும் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி கேங்கில் நடித்திருந்த நடிகர் கோகுல்நாத், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “விக்ரம் திரைப்படத்தில் ஒரு பெரிய வாய்ப்பை இழந்துவிட்டேன். அதனால் மிகவும் வருத்தமாக இருந்தது. விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி குரூப்பில் நான் நடித்திருந்தேன். சில காட்சிகளில் மட்டுமே நான் வந்து போனேன். ஆனால் அந்த படத்தில் எனக்கு கூடுதலாக நிறைய காட்சிகள் இருந்தது.

குறிப்பாக ஏஜெண்ட் டீனாவுக்கு எனக்கும் ஒரு ஃபேஸ் டூ ஃபேஸ் சண்டை காட்சியே இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நான் ஆர்யாவின் கேப்டன் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அங்கு என்னை லாக் செய்துவிட்டார்கள். என்னை அவர்கள் போகவிடவில்லை. அதன் பின் லோகேஷ் கனகராஜ் என்னிடம் அந்த காட்சியில் நீ நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறினார். இன்று ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் மிக பெரிய அளவில் பேசப்படுகிறது. அந்த காட்சியில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதனை நான் தவறவிட்டுவிட்டேன்” என மிகவும் வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டார்.





