இசைஞானி இளையராஜா, அன்னக்கிளி உன்னைத்தேடுதே பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அவரது 1000வது படம், இயக்குநர் பாலா இயக்கத்தில், சசிக்குமார், வரலட்சுமி சரத்குமார் நடித்த தாரை தப்பட்டை படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா, தன் சகோதரர் கங்கை அமரனுடன், தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு, சினிமாவில் இசையமைக்க வாய்ப்பு தேடி வந்தவர். பண்ணைபுரத்தில், பாவலர் சகோதர்கள் என்ற பட்டப் பெயரும் இவர்களுக்கு உண்டு. பண்ணைபுரத்தில், இவர்களுடன் மிக நெருங்கிப் பழகியவர்தான் இயக்குநர் பாரதிராஜா. சென்னை வந்ததும் அந்த நட்பு இன்னும் இறுக்கமானது.
தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படத்தில் இசையமைக்க இளையராஜாவுக்கு வாய்ப்பு தந்து, அந்த படமும் செம ஹிட் ஆன பிறகு, கிடுகிடு என திரையிசை பயணத்தில் முன்னுக்கு வந்தார் இளையராஜா. மோகன் நடித்த படங்களின் பாடல்கள் அனைத்துமே இளையராஜா இசையில் வெளிவந்தவை தான். விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என ரசிகர்களின் செவிகளை குளிர வைத்த, கால்களை ஆட வைத்தது இளையராஜாவின் இசைதான்.
இன்று பெருமைமிக்க இசை கலைஞனாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். படத்தை அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்கிறார். இவர்தான் கேப்டன் மில்லர் படத்தின் இயக்குநர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க முக்கிய காரணம், அவர் இசைஞானியின் மிகப் பெரிய ரசிகர் என்பது மட்டுமே காரணம் அல்ல. சினிமாவில் ஆரம்ப காலத்தில், சினிமா இயக்குநராக போராடியவர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா. 2 மகன்கள், 2 மகள்கள் என குடும்பத்தை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு, சினிமா வாய்ப்புகளுக்காக கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.
அப்போது என் ராசாவின் மனசிலே என்ற படத்தை இயக்க அவருக்கு இயக்குநர் வாய்ப்பை கொடுத்தது அன்றைய தயாரிப்பாளராக இருந்த நடிகர் ராஜ்கிரண்தான். அந்த படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். அந்த படத்துக்கு பிறகுதான் கஸ்தூரி ராஜா தமிழ் சினிமாவில் இயக்குநராக காலடி பதித்து வெற்றி பெற்றார். எனவே தந்தையின் வளர்ச்சிக்கு ஆரம்ப படிக்கட்டுகளாக உதவிய ராஜ்கிரணை, தனது ப. பாண்டி படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். இப்போது இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடித்து நன்றிக்கடன் தீர்க்கிறார் என்று தெரிய வந்துள்ளது.





