இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது வாழை எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வாழும் விவசாய மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். முக்கியமாக சிறுவர்களுக்கு இந்த திரைப்படத்தின் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களைச் சுற்றியே இந்த படத்தின் கதை நகரும் என்று தெரிகிறது.
முதலில் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதாக தான் இருந்தது. ஹாட் ஸ்டார் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அதன் முடிவு மாற்றப்பட்டது. முதலில் திரையரங்குகளில் வெளியான பிறகு, ஓடிடியில் வாழை திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து, துருவ் விக்ரமை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் மாரி செல்வராஜ். கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. கர்ணன் திரைப்படத்தை முடித்த பிறகு இதனைத் தான் மாரி செல்வராஜ் இயக்குவதாக இருந்தார். ஆனால் உதயநிதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் முதலில் மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார்.
இது திரைப்படத்திற்காக துருவ் விக்ரமும் பல மடங்கு உழைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகவே அவர் கபடி பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த மனத்தி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்னும் கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையை தான் மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்குகிறது. ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தை எடுக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு அவர் கார்த்தியுடன் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது உறுதிப்படுத்தப்படும் வகையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய மாரிக்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் இயக்குனரே என வாழ்த்து பதிவிட்டது. இதனால் மாரி செல்வராஜ் கார்த்தி கூட்டணி இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது.





