இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்தவர் பா ரஞ்சித். அங்கிருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்ட அவர் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத புதிய தளத்தில் அந்த திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார்.
தலித் மக்களுக்கான வாழ்வையும், அவர்கள் சமூகத்தின் நசுக்கப்படுவதையும் இதற்கு முன்னால் வந்த பல இயக்குனர்கள் கூறியிருந்தாலும், பா ரஞ்சித் ஒருவர் தான் அதை வெட்ட வெளிச்சமாக சரியான விதத்தில் காட்சிப்படுத்தினார் என்று கூறலாம்.
பா ரஞ்சித்திற்கு பிறகு இங்கு சமூகம் சார்ந்த பல கதைகள் எடுக்கப்பட்டது என பலரும் கூறி வருகின்றனர். தனது இரண்டாவது திரைப்படம் ஆன மெட்ராஸில், சுவர் அரசியலையும், அதற்குப் பின்னால் இருக்கும் சாதிய மனப்பான்மையையும் தோலுரித்துக் காட்டி சபாஷ் போட வைத்தார் பா ரஞ்சித்.
இதன்பிறகு ரஜினிகாந்த்தை வைத்து கபாலி காலா ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய, சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்தார். இந்த நிலையில் தற்போது அவர் தங்கலான் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் மாறுபட்ட வேடத்தில் விக்ரம் காட்சியளிக்கிறார். இந்த திரைப்படம் குறித்து பா ரஞ்சித் பேசியிருப்பதாவது,
இந்தத் திரைப்படம் கே ஜி எஃப் தங்க சுரங்கத்திலும், அங்கு பணியாற்றிய ஒடுக்கப்பட்ட மக்கள் விரும்பும் சுதந்திரம் பற்றியும் பேசுகிறது. அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக இருப்பவன், தனது மக்களின் ஆசையை நிறைவேற்ற முடியுமா இல்லையா என்பதை சுற்றியே கதை நகரும். இது திரைப்படத்திற்கு பிறகு இந்தி திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறேன். அதில் நடிக்கும் நடிகர் குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று பேசி இருக்கிறார்.





