நடிகர் அஜித் குமாரின் 63வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
தெலுங்கின் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாகவும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இப்படி அஜித் 63வது படத்தின் அறிவிப்பு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் வேளையில், விஜயின் கோட் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கம் இந்தத் திரைப்படத்தில் பிரபுதேவா பிரசாந்த் சினேகா லைலா மீனாட்சி சௌத்திரி மைக் மோகன் வைபவ் அஜ்மல் பிரேம்ஜி அமரன் ஜெயராம் யோகி பாபு வி டிவி கணேஷ் உள்பட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.
இதன் சூட்டிங் டெல்லி தாய்லாந்து துருக்கி புதுச்சேரி சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. டைம் ட்ராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
ஏற்கனவே கீதை திரைப்படத்திற்கு விஜய் யுவன் கூட்டணி பணியாற்றி இருந்தது. தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இதில், கங்கை அமரன் எழுதிய பாடலுக்கு விஜய் குரல் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அண்மையில் யுவன் சங்கர் ராஜாவும் உறுதிப்படுத்தி இருந்தார்.
படத்தில் இரண்டு விஜய் நடிப்பது உறுதியாக இருக்கும் நிலையில் ஒருவருக்கு ஹீரோ கதாபாத்திரம் என்றும் மற்றொருவருக்கு வில்லன் கதாபாத்திரம் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் திரிஷாவும் வருகிறாராம். ஒரு பாடலுக்கு அவர் விஜயுடன் சேர்ந்து நடனமாடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





