கடந்த 2013ம் ஆண்டில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் தலைவா. இந்த படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் நடித்திருந்தார். மேலும் அமலாபால் சத்யராஜ் ராகினி நந்துவானி சந்தானம் பொன்வண்ணன் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தலைவா படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் பெரிய சிக்கலை சந்தித்தது. அப்போது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கொடநாடு எஸ்டேட்டில் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் நேரில் சந்தித்து தலைவா படம் எப்படியாவது ரிலீஸ் ஆக உதவி செய்யுங்கள் என்று கேட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இப்போதும் முதல்வர் விஜய் குறித்து அரசியல் விமர்சனம் செய்யும் பலரும் தலைவா படத்துக்கு கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா வீட்டு காம்பவுண்ட் கேட் அருகே நின்று கைகட்டி நின்றது விஜய்க்கு மறந்து போய்விட்டதா என்று விமர்சிக்கும் அளவுக்கு தலைவா படம் பலத்த பாதிப்பை விஜய்க்கு ஏற்படுத்தியது. இந்த நிலையில் தலைவா படம் ரிலீசில் ஏற்பட்ட அந்த சிக்கலுக்கு நான்தான் காரணம் என்று நடிகர் சந்தானம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது, தலைவா படத்தில் ஒரு காட்சியில் விஜயிடம் நான், அரசியலுக்கு வர வேண்டிய எல்லா தகுதியும் உனக்கு வந்துடுச்சு என்று நான் ஒரு டயலாக் சொல்லுவேன். அதுக்கு அப்புறமா அது ஒரு பெரிய இஷ்யூவாக மாறிவிட்டது.
அதனால அந்த படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் சுத்தீட்டு இருந்தாங்க. அப்புறம் அந்த படம் ரிலீஸ் ஆகும்போது பிரிவ்யூ ஷோ நடந்துச்சு. அப்போ விஜயும் அந்த ஷோவுக்கு வந்திருந்தார். நானும் போனேன். அப்போ நான் அவர்கிட்ட என்ன அண்ணே படத்தை ரொம்பவும் தள்ளி ரிலீஸ் பண்றோம் என்று கேட்டேன்.
அதற்கு அவர், எல்லாம் உன்னால தாய்யா என்றார். என்னாலே என்னண்ணே என்றேன். ஒரு டயலாக் சொன்னியே ஞாபகம் இருக்குதா? அரசியலுக்கு வர்ற எல்லா தகுதியும் உனக்கு வந்துடுச்சுன்னு. அதை நீ போற போக்குல போட்டுட்டு போயிட்டே. அது அங்கங்கே பத்தீட்டு வெடிக்குது. அதனால் முதன்முதலா அவரை அரசியலுக்கு சம்பந்தப்படுத்தி பேசினது என் டயலாக் தான் என்று நடிகர் சந்தானம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





