நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சோதனை காலம் என்று கூறலாம். அவர் நடித்த எந்த திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் அடித்தாலும், அது ஜெயம் ரவிக்கு ஆன திரைப்படம் என்று கூற முடியாது.
இருப்பினும் அந்த திரைப்படத்தில் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாகவே ஜெயம் ரவி செய்து முடித்தார். மன்னர் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக அவர் நடித்திருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். இது ஒரு பக்கம் இருக்க, அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன.
பூமி, அகிலன், இறைவன், சைரன் போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறின. இதன் காரணமாக தனது அடுத்த திரைப்படங்களில் மிகவும் கவனமாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
இதில் அவர் இயக்குனர் ராஜேஷ் உடன் இணைந்து பிரதர் எனும் படத்தில் நடித்திருக்கிறார். அக்கா தம்பி பாசத்தை மையப்படுத்தி நகைச்சுவை பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஜெயம் ரவியின் அக்காவாக பூமிகா நடித்திருக்கிறார். இதுபோக காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார்.
இதனை உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜீனி என்ற படத்திலும் ஜெயம் ரவி நடித்துள்ளார். மிகப்பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில் படம் குறித்து பல்வேறு தகவல்களை புதுமுக இயக்குனர் அர்ஜுனன் கூறியிருக்கிறார்.
அதில், இந்த படத்தின் கதையை கமல்ஹாசன் சாரை மனதில் வைத்து தான் எழுதினேன். ஆனால் நான் புதுமுகம் என்பதால், அவரிடம் சென்று கதை கூறும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐசரி கணேஷ் சாரை பார்த்து இந்த கதையை கூறிய போது, இதில் ஜெயம் ரவி நடித்தால் ஓகேவா என்று அவர் கேட்டார். பிறகு நான் ஜெயம் ரவியிடமும் கதையை கூற, அவர் நான் தான் உங்கள் ஜீனி என்று தெரிவித்தார். இப்போது ஜெயம்ரவியை தவிர வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்தில் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் பொருந்தி போய்விட்டார் என்று தெரிவித்துள்ளார்.





