நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் குதித்து விட்டார். ஆளுங்கட்சி திமுகவுக்கு எதிராக தான் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அவருடன் நாம் தமிழர் கட்சி சீமானும் கைகோர்க்க இருப்பதால், நிச்சயமாக தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
நடிகர் விஜய் ஆரம்பத்தில் திமுகவுடன் நட்பான ஒரு உறவில்தான் இருந்தார். ஏனெனில் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசகேர் ஒரு காலத்தில் அவர் இயக்குனராக கொடி கட்டிப் பறந்த போது, கருணாநிதி மீது பற்று கொண்டவராக இருந்தார். அதை அவர் இயக்கிய படங்களிலும் அவ்வப்போது வௌிப்படுத்துவார். ஆனால் அப்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வட்டத்துக்குள் திமுக இருந்தது.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, கட்சி பதவி, அரசியல் ஆதாயங்களுக்காக கருணாநிதி பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற விஷயங்களை காற்றில் பறக்கவிட்டார். பிறகு திமுக குடும்ப அரசியலாக மாறியது. கருணாநிதியின் இந்த போக்கை விரும்பாதவர்கள், எம்ஜிஆரின் பக்கமாக வந்து அதிமுகவில் இணைந்ததெல்லாம், தமிழக அரசியல் வரலாற்றில் நடந்த கதை.
அதே போல் இப்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கோலோச்சி வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியிருக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். மதுரை, திருச்சி என 2 இடங்கள் கூறப்பட்டாலும் இன்னும் இடம் முடிவாகவில்லை.
இந்நிலையில் திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அதிகார மையமாக திகழும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது கட்சியினருக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்துக்கு திமுகவினர் தரப்பில் இருந்து எந்தவிதமான இடையூறும் செய்யக் கூடாது. அவரது படம் வெளியாகும் போது, ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களை இறக்கி, தியேட்டர் எண்ணிக்கையை குறைக்க கூடாது.
விஜய் நடித்த தி கோட் படம் எந்த சிக்கலும் இல்லாமல் திரையிடப்பட வேண்டும். அந்த படம் ஓடட்டும், ஓடாமல் போகட்டும். ஆனால் திமுகவினரால் இந்த பாதிப்பு என யாரும் ஒருவார்த்தை புகார் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள் என்று எச்சரித்துள்ளார். ஏற்கனவே லியோ இசை வெளியீட்டு விழா நடக்காமல் போனதற்கு திமுக செய்த இடையூறுதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.





