நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் பிசியாக இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் தான் இதன் இயக்குனர். இதில், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதற்கு அடுத்ததாக ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருப்பது இங்கு பலருக்கும் தெரியும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படம் தனது முந்தைய திரைப்படங்களைப் போல இருக்காது என்றும், பரிசோதனை முயற்சியில் இந்த படத்தை தான் இயக்க இருப்பதாகவும் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். மேலும் இது எல் சி யு வில் வராது என்றும் அவர் தெளிவுபடுத்தி இருந்தார். ஜூன் அல்லது ஜூலை மாதம் இதன் சூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான சூழலில் நேற்று தலைவர் 171 வது திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் கடிகாரத்தை மையப்படுத்தியே புகைப்படம் இருந்தது. குறிப்பாக, ரஜினிகாந்த் தனது இரு கைகளிலும் வாட்ச்களை மாட்டியிருப்பது போன்று போஸ்டர் இருந்தது. இதன் மூலம் இந்த திரைப்படம், காலத்தை மையமாகக் கொண்டு இருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க, யாருமே எதிர்பார்க்காத வகையில் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. இது சூர்யாவின் 44-வது திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் love laughter war என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விஜிக்காக கார்த்திக் சுப்புராஜ் தயார் செய்து வைத்திருந்த கதையை தான் தற்போது சூர்யா கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதா கொங்கரா உடனான படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டு, திடீரென சூர்யா வேறு படத்திற்கு சென்றிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை சூர்யா அந்த படத்தில் இருந்து வெளியேறுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





