தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து இப்போது ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் சூரி. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்த விடுதலை படம் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில் தொடர்ந்து நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அவர் நடித்த கருடன் கொட்டுக்காளி மாமன் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து இப்போது மண்டாடி என்ற படத்தில் சூரி நாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் மண்டாடி படத்தில் சூரியுடன் நடிகர் சத்யராஜ் நடிகை மஹிமா நம்பியார் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மண்டாடி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் மீனவனாக நடிகர் சூரி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சூரியை பொருத்தவரை ஹீரோவாக நடித்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற பிறகும் ரசிகர்களிடம் மிகவும் பணிவாக தான் நடந்து கொண்டிருக்கிறார். அவர் நடித்த மாமன் படம் வெளியான போது அவரது ரசிகர்கள் சிலர் மதுரையில் ஒரு கோவிலில் மண்சோறு சாப்பிட்டு இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
இந்த செயலை கடுமையாக கண்டித்த நடிகர் சூரி, இதுபோன்ற அபத்தமான விஷயங்களை என்னுடைய ரசிகர்கள் யாரும் செய்யக்கூடாது. படம் நன்றாக இருந்தால் அதுவே ஓடும். இப்படிப்பட்ட விஷயங்களை நிச்சயமாக நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் அவர்களையும் என் ரசிகர்களாக கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கோபமாக பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சூரி கூறியதாவது, சித்தப்பா பெரியப்பா ஸ்தானம் எல்லாம் எங்கள் வீட்டில் இல்லை. எங்க குழந்தைகளுக்கு சித்தப்பா பெரியப்பா என்றால் என்னவென்றே தெரியாது. அவங்கவங்க பேர் மட்டும் தான் சொல்லுவாங்க. என்னோட அண்ணா, தம்பியை அப்பான்னு தான் கூப்பிடுவாங்க. அப்பா கூப்பிடுகிறார்ன்னு சொன்னா எந்த அப்பான்னு கேப்பாங்க.
அந்த அளவுக்கு குழந்தைகிட்ட நாங்க பாசமா இருக்கோம். நாங்க என்னோட பிள்ளை, தம்பியோட பிள்ளைன்னு பார்க்க மாட்டோம். எல்லாம் எங்க புள்ளைங்களாக தான் பார்ப்போம். அதனாலேயே அவர்களுக்கு சித்தப்பா பெரியப்பான்னா தெரியாது. சித்தப்பா அப்படின்னா என்னான்னு கேட்பாங்க என்று நடிகர் சூரி கூறி இருக்கிறார்.





