நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவரை வைத்து படம் இயக்கினால், தயாரித்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்றுதான் தமிழ் சினிமா உலகில் பேசுகின்றனர். ஆனால் ரஜினியால் எனக்கு நான்கரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக பிரபல டைரக்டர் ஒருவர், சமீபத்தில் நடந்த விழாவில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ரஜினி குறித்து நெகட்டிவ் ஆக அவர் விழா மேடையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமானவர் டைரக்டர் ஆர் வி உதயகுமார். கடந்த 1980, 90களில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பிரபு நடித்த உரிமை கீதம், விஜயகாந்த் நடிப்பில் சின்னக்கவுண்டர், ரஜினி நடிப்பில் எஜமான், கமல் நடிப்பில் சிங்காரவேலன், கார்த்திக் நடிப்பில் கிழக்கு வாசல், சத்யராஜ் நடிப்பில் புதிய வானம் போன்ற அவரது பல படங்கள், முன்னணி கதாநாயகன்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
நடிகர் ராமராஜன், 1980, 90 களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர், ராமராஜன் படங்களை இப்போதும் ரசிக்க முடியும். மிக எளிமையாக கிராமத்து கதைகள்தான். இளையராஜா இசை, கவுண்டமணி செந்தில் காமெடி என படம் பார்ப்பதே தெரியாமல் மனசுக்கு ஒருவித அலாதியான மகிழ்ச்சியை அள்ளித் தருவது ராமராஜன் படங்கள்தான்.
மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார். சாமானியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்வி உதயக்குமார் பேசிய போதுதான், ரஜினிகாந்தால் நான் நான்கரை கோடி ரூபாய் நஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
டைரக்டர் ஆர்வி உதயக்குமார் பேசுகையில், தமிழ் சினிமாவில் ரஜினி, கமலை விட மிக யதார்த்தமான நடிகர் ராமராஜன்தான். நடிப்பில் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார். நான் ராமராஜனை வைத்து படம் இயக்கவில்லை என்ற வருத்தம் இன்னமும் இருக்கிறது. அந்தளவுக்கு ராமராஜன் நல்ல நடிகர்.
இயக்குனராக இருந்த என்னை ஒரு காலத்தில், என் நண்பர்கள் வினியோகஸ்தராக இழுத்து விட்டுவிட்டனர். நான் வினியோகஸ்தராக இருந்து முதலில் வாங்கிய படம் தர்மத்தின் தலைவன்தான். அந்த படம் ரிலீஸ் அதிக நாட்கள் தள்ளிப் போனது. சம்பாதிக்கவே இல்லை. பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டேன். அந்த படத்தால் எனக்கு நான்கரை கோடி ரூபாய் நஷ்டம். அப்புறம் ராமநாராயணன் கொடுத்த ஐடியா, கொஞ்சமா காசு கொடுத்து சின்ன படமா வாங்கு என்றார். அப்படி நான் வாங்கிய படம் கரகாட்டக்காரன். சில லட்சங்கள் கொடுத்து வாங்கி, ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்தேன், என்று பேசியிருக்கிறார் டைரக்டர் ஆர்வி உதயகுமார்.





