நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் கில்லி. ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரித்த இந்த படத்தை டைரக்டர் தரணி டைரக்ட் செய்தார். கில்லி படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், விமல், நாகேந்திர பிரசாத், ஜானகி கணேஷ், ஜெனிபர், ஆசிஷ் வித்யார்த்தி, தாமு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கில்லி படம் மிகப்பெரிய அளவில் அப்போதே வெற்றி படமாக அமைந்தது.
இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கில்லி படம் தியேட்டர்களில் கடந்த 20 ஆம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்டது. தியேட்டர்களில் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்துக்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆரவாரமான வரவேற்பும், கொண்டாட்டமும் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தியேட்டர்களில் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியிலும் ரசித்து, மகிழ்ந்து கைதட்டி கூச்சலிட்டு விஜய்க்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அது மட்டும் இன்றி பாடல் காட்சிகளில் டீன் ஏஜ் வயதினர் தியேட்டருக்குள் ஆங்காங்கு கும்பலாக நின்று குத்தாட்டம் போட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 20 ஆம் தேதி வெளியான கில்லி படம், இதுவரை 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முன்னணி இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ரத்னம் படம், கடந்த மூன்று நாட்களில் 7 கோடி ரூபாயை கூட வசூலில் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கில்லி படத்தில் ஓட்டேரி நரி என்ற கேரக்டரில் நடிகர் தாமு நடித்திருந்தார். இவர் படத்தில் இரட்டை ஜடை போட்டுக்கொண்டு சில காட்சிகளில் பயங்கரமாக கலாய்த்து பேசி நகைச்சுவை செய்திருப்பார். காதலுக்கு மரியாதை, லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல படங்களில் விஜயுடன் ஆரம்ப காலத்தில் தாமு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தாமு, 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மரக்கன்றுகள், பல இடங்களில் பெரிய மரங்களாக, இப்போது அடிக்கிற வெயிலுக்கு நிழல் தந்து கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் அந்த மரக்கன்றுகளை நட்டவர்களை, எப்போதாவது விசில் அடித்து கொண்டாடி இருக்கிறீர்களா என்று தாமு கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் மீது தாமுவுக்கு ஏன் இந்த கோபம், ஒருவேளை இப்போதைய படங்களில் தனக்கு விஜயுடன் நடிக்க வாய்ப்பு தரவில்லை என்ற கடுப்பில் இப்படி தாமு பேசுகிறாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





