நடிகர் அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் ஏராளமான திரைப்படங்கள் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. அமராவதி திரைப்படத்தில் அறிமுகமான அவருக்கு, மிகப்பெரிய என்ட்ரியை கொடுத்தது காதல் கோட்டை திரைப்படம். அங்கிருந்து அவர் காதல் மன்னன் படத்தில் நடித்து, இளைஞர்களின் மனதில் நுழைந்தார்.
இப்படி முழுக்க முழுக்க சாக்லேட் பாயாக நடித்து வந்த அஜித் குமாருக்கு ஆக்சன் திரைப்படமாக அமைந்தது அமர்க்களம். அஜித்தின் 25 வது திரைப்படமாக உருவான அமர்க்களம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் கதாநாயகியாக ஷாலினி நடிக்க, அஜித்திற்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னாளில் திருமணம் செய்து கொண்டனர்.
2000 ஆம் ஆண்டு அஜித் ஷாலினி இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு அடுத்த வெற்றியை கொடுத்தது வாலி திரைப்படம். அதில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த அஜித், தான் மிகச்சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து காட்டினார். இந்த திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கி இருந்தார்.
அந்த சமயத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஏ ஆர் முருகதாஸ், அஜித்திடம் கதை கூற அது பின்னாளில் தீனாவாக வளர்ந்தது. இன்று அஜித்தை பலரும் தல தல என்று கொண்டாடுவதற்கு பிள்ளையார் சுழி போட்டது அந்த திரைப்படம் தான். அதில் நடித்த மகாநதி சங்கர் அஜித்தை பார்க்கும் போதெல்லாம் தல என்று தான் அழைப்பார்.
அது மட்டுமல்ல, ஒரு முழு ஆக்சன் திரைப்படமாக தீனா உருவாகி அஜித்திற்கு மேலும் பல ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. 2001 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படியான சூழலில் அந்த திரைப்படம் குறித்து, நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் புதிய தகவல் அளித்துள்ளார். அதாவது முதலில் இந்த திரைப்படம் பிரசாந்தித்திற்கு தான் வந்ததாம். அப்போது பிரசாந்திற்கு அந்த படத்தை பண்ண நேரம் இல்லாமல் போய்விட்டதாம். இதன் காரணமாக கொஞ்சம் காலம் கழித்து இந்த திரைப்படத்தை பண்ணலாம் என்று பிரசாந்த் கூறினாராம். ஆனால் அதற்கு இயக்குனர் வேறு ஹீரோவை வைத்து எடுத்து விட்டதாக தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். இவரது பதிலைக் கேட்ட அஜித் ரசிகர்கள், தியாகராஜனை கிண்டல் செய்து வருகின்றனர்.





