மாரி செல்வராஜ் தற்போது விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து படம் எடுத்து வருகிறார். இதற்கு பைசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டைட்டிலுக்கு கீழே காளமாடன் என்ற டேக்லைனும் உள்ளது. பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இதில் அனுபமா பரமேஸ்வரன், ரஷிஜா விஜயன், பசுபதி, லால், கலையரசன், அழகம்பெருமாள், அருவி மதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதுவரை சந்தோஷ் நாராயணன் மற்றும் ஏ ஆர் ரஹ்மானுடன் பணி புரிந்த மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்திற்காக நிவாஸ் கே பிரசன்னாவுடன் இணைந்திருக்கிறார்.
கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையை தான் மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மையக்கரு தான் அது என்றும் படத்தின் கதையோட்டம் வேறு மாதிரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் எடுத்து வருகிறார்.
மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு அவர், வாழை என்னும் படத்தை எடுத்திருந்தார். சிறுவர்களை மையப்படுத்தி இந்த கதை எழுதப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தாமிரபரணி நதிக்கரையோரம் தான் படத்தின் நாடித்துடிப்பு என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்காக எடுத்தார். நேரடியாக ஓடிடி தளத்திலேயே இது வெளியாவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றி விட்டது. அதன்படி திரையரங்குகளில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
வாழை திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் நிலையில், ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இது மட்டுமல்ல, அஜித்தின் விடாமுயற்சி, ரஜினிகாந்தின் வேட்டையன், சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய திரைப்படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமே ரிலீஸ் செய்கிறது.





