தமிழ் சினிமாவில் இதுவரை மூன்றே மூன்று திரைப்படங்கள் கொடுத்து புகழின் உச்சத்தில் இருப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். சாதி சார்ந்த பாகுபாட்டையும், அதில் இருக்கும் அரசியலையும் பா ரஞ்சித் தோலுரித்துக் காட்ட, அவருடன் இணைந்தார் மாரி செல்வராஜ்.
சொல்லப்போனால் அவரின் முதல் திரைப்படமான பரியேறும் பெருமாளை, பா ரஞ்சித் தான் தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. சாதிய பாகுபாடும், அதன் ஆக்ரோஷம் மனநிலையும் வெட்ட வெளிச்சமாக காட்சிப்படுத்தி இருந்தார் மாரி செல்வராஜ்.
இப்படி முதல் திரைப்படத்திலேயே, பலராலும் பேசப்பட்ட அவருக்கு அடுத்த திரைப்படமான கர்ணன் வெற்றி படமாக அமைந்தது. இதில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தையும் மாரி செல்வராஜ் கொடுத்தார். ஆனால் இந்த திரைப்படம், அவரது முந்தைய படங்களை பார்க்கும் பொழுது சற்று சுமாராகத்தான் இருந்தது.
இருப்பினும் பகத் பாசிலின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால், மாமன்னன் திரைப்படம் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டது. இதனிடையே அவர் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து படத்தை இயக்குவதாக தான் இருந்தது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்தப் படத்தின் பணிகளை ஒத்திவைத்து விட்டு அவர் மாமன்னன் படத்தை எடுத்தார்.
இதன் பிறகு கிடைத்த சிறிய இடைவேளையில் அவர் வாழை எனும் திரைப்படத்தை இயக்கினார். சிறுவர்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படத்தின் அடுத்த அப்டேட் இதுவரை வெளியாகவே இல்லை. இதன் நடுவே, தற்போது தனது ஐந்தாவது திரைப்படமாக துருவ் விக்ரமை வைத்து அவர் பணிகளை தொடங்கி இருக்கிறார்.
ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த மனத்தி என்னும் கிராமத்தில் புகழ்பெற்ற கபடி வீரர் கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதற்காக துருவ் கபடி வீரர்களுடன் பயணித்து அதற்கான முறையான பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்க உள்ளார். இதற்கான சூட்டிங் பணிகள் தொடங்கி இருக்கும் வேளையில், அதன் அப்டேட்களை மாறி செல்வராஜ் திங்கட்கிழமை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் அவரது நாலாவது திரைப்படமான வாழை குறித்த அறிவிப்பும் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.





