இயக்குனர் வெங்கட்பிரபு தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கிறார். மாநாடு, மங்காத்தா, சென்னை 28, சரோஜா போன்ற வெற்றிப் படங்களை தந்தவர். இப்போது விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கிய படம் தி கோட். வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் தி கோட் ரிலீஸாகிறது.
நேற்று தி கோட் படத்தில் டிரெய்லர் வெளியானது. இதில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்ற காட்சிகளுடன் தி கோட் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் விஜய் பெயர் காந்தி என வைக்கப்பட்டுள்ளது. டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் 23 வயது விஜய் காட்டப்படுகிறார். அப்பா மகன் என்ற 2 வேடங்களில் விஜய் நடித்துள்ளார். விஜயகாந்த், விவேக் போன்றவர்களும் இந்த படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
தி கோட் டிரெய்லரில் ஒரு காட்சியில் நடிகர் விஜய், மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடலை பாடுகிறார். இப்போது விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக உள்ள நிலையில், இப்படி முருகன் பாடலை பாடியது, அரசியல் நோக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் விஜய் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அவரது பெயரே ஜோசப் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தி கோட் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், விஜய் இப்போது அரசியலில் நுழைந்திருக்கிறார். இந்த படத்தில் முப்பாட்டன் முருகன் பாடலை வைத்தது அரசியலுக்காகவா என்று கேள்வி எழுப்பினர்.
கில்லி படம் பார்த்தீங்களா, அப்போது இந்த கேள்வியை கேட்டீங்களா என்று அந்த செய்தியாளரிடம் கோபப்பட்டார் இயக்குனர் வெங்கட்பிரபு. அப்போது அவர் அரசியலுக்கு வரவில்லையே என்று செய்தியாளர் பதில் சொன்னார். தி கோட் படத்தில் முருகன் பாடல் வருவது கில்லி படம் ரெபரனஸ் மட்டும்தான். வேறு எந்த காரணமும் இல்லை, என்று விளக்கம் அளித்தார்.





