சினிமாவில் யாருக்கு எப்போது எப்படி அதிர்ஷ்ட காற்று அடிக்கும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. சில நேரங்களில் ஓரிரு படங்களில் நடிக்கும் நாயகிகள், முன்னணிக்கு வந்து விடுகின்றனர். அந்த படங்களில் அபார வெற்றி அவர்களை கோபுரத்தின் உச்சியில் கொண்டு சென்று உட்கார வைத்து விடுகிறது.
சமீபத்தில் மலையாளத்தில் வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பிரேமலு. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் மமிதா பைஜூ. இந்த படத்தில் இவரது யதார்த்தமான நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தின் வெற்றிக்கு கதாநாயகியின் பங்களிப்பு மிக அதிகமாக தான் இருந்தது.
எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஆரவாரமும் இல்லாமல் டீன் ஏஜ் வயதினரின் இன்றைய யதார்த்த வாழ்க்கை, அவர்களது மனநிலைகள், எதிர்காலம் குறித்த பயங்கள், காதல், திருமண திட்டங்கள், தொழில் வாய்ப்புகள் என சகல விஷயங்களையும் கலந்து சொன்ன படமாக பிரேமலு படம் அமைந்தது. அதனால் இந்த படம் பார்ப்பதற்கு மிக சுவாரசியமானதாக ரசிகர்களுக்கு அமைந்தது.
சினிமாவை பொருத்தவரை ஒரு நாயகிக்கு முக்கியத்துவம் கிடைத்து விட்டால், அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவது இயல்புதான். அந்த வகையில் தமிழில் இப்போது இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். அந்த படத்தில் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்து விட்டது.
இந்த சூழலில், மலையாளத்தில் அறிமுகமான நடிகை மமிதா பைஜூவுக்கு தெலுங்கு படவுலகம் வாய்ப்பு கதவை திறந்துள்ளது. அவருக்கு அங்கு ஒரு முக்கிய படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா ரெட்டியுடன் ஒரு படத்தில் மமிதா பைஜூ நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மலையாளத்திலும், அதைத்தொடர்ந்து தமிழிலும் நடிக்கும் மமிதா பைஜூ அடுத்தததாக தெலுங்கிலும் காலடி பதிக்கிறார். ஜெர்சி படத்தின் இயக்குனர் கௌதம் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் விஜய் தேவர கொண்டா, ராணுவ வீரராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதிர்ஷ்டம் என்றால், இப்படி ஒரே படத்தில் அடிக்கணும் என்பார்கள். விஜய் 69வது படத்தில் இன்னும் கதாநாயகி யார் என முடிவாகவில்லை. அந்த அதிர்ஷ்டம் மமிதா பைஜூவுக்கு அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.





