நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்துடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, சௌபின் சபீர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விசாகப்பட்டனத்திற்கு படக்குழுவினர் சென்றனர். அங்கு படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த சூழலில், திடீரென அனைவரும் சென்னை திரும்பினார்கள். அங்கு செட் போடும் பணிகள் தாமதமாவதன் காரணமாகவே, படக்குழு சென்னை திரும்பியதாக கூறப்பட்டது.
தொடர்ந்து கூலி படத்தில் ரஜினிகாந்த் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே அவர் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான பணிகள் சூடு பிடித்துள்ளன. ஜெய் பீம் என்னும் திரைப்படத்தை எடுத்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த ஞானவேல் தான் இதனை இயக்கியிருக்கிறார்.
ஞானவேல் எடுத்திருப்பதால் இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். இதுபோக பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா, துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
கல்வித்துறையில் நடைபெற்ற ஊழலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். படத்தில் அவரது மனைவியாக மஞ்சு வாரியர் வருகிறார். இதில் ராணாதான் வில்லன் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனமான லைகா ஈடுபட்டுள்ளது. அதன்படி முதலில், மனசிலாயோ பாடல் வெளியாகி இருக்கிறது. அதில் ரஜினி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக விஜய் டிவி பிரபலம், ரக்சன் ரஜினியுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு உள்ளார். அவர் இதுவரை எந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது மட்டும் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.





