அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் நடித்த வெளியான படம் தாய்கிழவி. மிகப்பெரிய வரவேற்பை பாராட்டை பெற்ற இந்த படம் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஜவஹர்லால் நேரு கேரக்டரில் நடித்திருப்பவர் வேட்டை முத்துக்குமார் என்கிற முத்துக்குமார். இவர் வருகிற காட்சிகள் எல்லாம் படத்தில் வேற லெவலில் ரசிகர்களின் கவனத்தை பாராட்டை பெற்றுவிட்டது. அவர் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நடிப்பிலும் உடல் மொழியிலும் டயலாக் டெலிவரியிலும் ஒரு அட்டகாசமான நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
குறிப்பாக தனது மகனிடம், டேய் உங்க அம்மாவை கொத்தமல்லி டீ போடச் சொல்லுடா என்பதும், அதற்கு மகன் கேவலமாக திட்டவும் என் மகன் இப்பவே எவ்வளவு போர்ஸா இருக்கான் பாரு என பாராட்டும் காட்சியும் அதே போல் முனீஷ்காந்த் ஓட்டலில் சாப்பிடும் இலை முழுக்க அசைவமாக நிறைந்திருக்க மாடு பிடிமாடு என்று சிரிப்பதும், 21 விரலையும் வெட்டிடுவேன் என்று மிரட்டுவதும் ரசிக்க வைக்கின்றன.
டாஸ்மாக் பாரில், எவன்டா அவன் நொச நொசன்னு நொய் நொய்ன்னு போன் பண்ணிட்டே இருக்கான் என்று அலுத்துக்கொள்வதும், நான் இப்போ லிட்டிலி பிஸிஸ்ஸா இருக்கேன். அப்புறமா போன் பண்றேன் என்பதும், யார்ரா என் மவன் ராஜிவ் காந்தியா பேசறது? என்னடா புதுசா அப்பனுக்கு போன் பண்ணியிருக்கே என்று கேட்பதும் என முத்துக்குமார் வரும் காட்சி எல்லாம் ஸ்கோர் செய்து பட்டைய கிளப்பி இருக்கிறார்.
மதுரையை சேர்ந்த முத்துக்குமார் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற ஒரு சிறந்த கலைஞர். வேட்டை படத்தில் நடிகராக அறிமுகமான அவர் தொடர்ந்து சார்பட்டா பரம்பரை மகான் டிமாண்டி காலனி 2 பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். காக்கா முட்டை படத்தில் சிறுவனை அறையும் பீட்சா கடை மேனேஜராக நடித்திருந்தவர் முத்துக்குமார்தான்.
இப்படி பல படங்களில் நடித்திருந்தாலும் பேட்ட படத்தில் ரஜினியுடன் சில காட்சிகளில் முத்துக்குமார் நடித்திருந்து நல்ல கவனம் பெற்றது. ஆனால் இப்போது தாய்கிழவி படம் முத்துக்குமாருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. தாய்கிழவியாக ராதிகா சரத்குமார் சிறப்பாக நடித்திருந்தாலும் அவரை விடவும் ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்று ஸ்கோர் செய்தது முத்துக்குமார்தான் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.





