தமிழ் சினிமாத்துறையில் ஜீவி என்று அழைக்கப்பட்ட ஜீ வெங்கடேஷ், ஜீவி பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர். இவர் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். இவர் இயக்குனர் மணிரத்னத்தின் சொந்த தம்பி என்பது குறிப்பிடத் தக்கது. மணிரத்னம் இயக்கிய பல படங்களை, ஜீவி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன், கடன் தொல்லைகளால் சிக்கித் தவித்த ஜீவி தற்கொலை செய்துக்கொண்டார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் பல வெற்றிப் படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர். சில தோல்வி படங்கள் தந்த நஷ்டத்தால் கடன் தொல்லை தாங்க முடியாமல் இந்த துயர முடிவை எடுத்துவிட்டார்.
சமீபத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது மறைந்த தயாரிப்பாளர் ஜீவி குறித்து மனம் திறந்து பல விஷயங்களை பேசிய அவர், ஜீவி தற்கொலைக்கு அவரது தம்பி மணிரத்னமும் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த நேர்காணலில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியதாவது, அப்போது தயாரிப்பாளர் ஜீவி என்னை பார்க்க அடிக்கடி என் அலுவலகத்துக்கு வருவார். சில தோல்வி படங்களை தயாரித்த வகையில் பல நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டதாகவும், பல பிரச்னைகள் இருப்பதாகவும் என்னிடம் கூறி புலம்புவார்.
ஒருமுறை, திடீரென 2 நாட்கள் காணாமல் போய்விட்டார். பிறகு என் அலுவலகத்துக்கு வந்த ஜீவி, தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் வந்துவிட்டதாக கூறினார். அவரிடம், நான் இருக்கிறேன். உங்கள் பண பிரச்னைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். இதுகுறித்து பலரிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் இந்த மாதிரி இனிமேல் நினைக்காதீர்கள் என்று சத்தம் போட்டு, தைரியம் சொல்லி அனுப்பினேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
அவர் இறப்பதற்கு முன் ஒருமுறை ஜீவியிடம் பேசிய போது, உங்கள் தம்பி, மணிரத்னத்திடம் சொல்லி ஒரு படம் எடுத்து தரச் சொல்லுங்கள். உங்கள் கடன் பிரச்னை உடனே தீர்ந்து விடுமே என்றேன். அதற்கு அவர், அவன் எல்லாம் ஒரு மனுசனா, அவனைப் பத்தி பேசாதே என்று என்னிடம் கூறினார். உண்மையில் மணிரத்னம் நினைத்திருந்தால், அண்ணன் ஜீவிக்கு அவர் உதவியிருக்கலாம். அவரும் சந்தோஷமாக தன் குடும்பத்துடன் வாழ்ந்திருப்பார். அவருக்கு உதவாத மணிரத்னமும், ஜீவி தற்கொலைக்கு ஒரு முக்கிய காரணம் என்று கோபமாக தன் கருத்தை பதிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.





