ஒரு சினிமா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் அதில் நடித்த ஹீரோ நடிகர் பெரிய அளவில் புகழப்படுகிறார். விருது பெறுகிறார். தன் சம்பளத்தையும் பலமடங்கு உயர்த்திக்கொள்கிறார். அதே போல் இயக்குனர், ஒளிப்பதிவாளர், கதாநாயகி, காமெடி நடிகர் என அந்த படத்தில் நடித்த அனைவருக்குமே நல்ல பெயரும் கிடைத்து புகழும் அதிகரிக்கிறது. அவர்களும் தங்களது சம்பளத்தை உயர்த்தி விடுகின்றனர்.
ஆனால் என்னதான் சிறந்த கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என இருந்தாலும், சிறந்த நடிகர்கள் அந்த படத்தில் நடித்திருந்தாலும் ஒரு படம் உருவாக்க ஆணிவேராக இருப்பது அந்த படத்தை பல கோடிகளை போட்டு முதலீடு செய்யும் தயாரிப்பு நிறுவனம்தான். அவர்கள் அந்த படத்தை தயாரிக்க முன்வராவிட்டால், அப்படி ஒரு படைப்பை அவர்களால் தந்திருக்க முடியாது. ரசிகர்கள் காண்பதற்கு திரைக்கும் வந்திருக்காது.
அதனால் சினிமா நன்றாக வாழ வேண்டும் என்றால், முதலில் முதுகெலும்பாக இருக்கிற தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல முறையில் செயல்பட வேண்டும். லாபகரமான படங்கள் வெற்றியை தருகிற பட்சத்தில் அவர்களால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முதலீடு செய்து, படங்களை தயாரிக்க முடியும். இல்லை என்றால், அவர்கள் தொடர்ந்து படங்களை தயாரிக்க முடியாது.
இப்படி பல சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், காணாமல் போயிருக்கின்றன. ஒரு கட்டத்துக்கு பிறகு பயங்கரமான கடன் தொல்லைகளில் சிக்கி, சின்னாபின்னமாகி இனி படங்களை தயாரிக்கவே வாய்ப்பில்லை என்ற நொடிந்து போயிருக்கின்றன. தமிழ் சினிமாத்துறையிலேயே அப்படி பல தயாரிப்பு நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டன.
இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை தயாரித்த நிறுவனம் லைகா புரடக்சன்ஸ். பல ஹிட் படங்களை கொடுத்த முக்கிய நிறுவனம் இது. இப்போதும் விடாமுயற்சி, இந்தியன் 2, இந்தியன் 3, வேட்டையன் படங்களை தயாரித்து வருகிறது. பொன்னியின் செல்வன், லால் சலாம் படங்களை தயாரித்ததும் இந்த நிறுவனம்தான்.
லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு தொடரும் நிதி நெருக்கடி, போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் சினிமா தயாரிப்பில் ஏற்படும் நஷ்டம் காரணமாக, மிக விரைவில் லைகா புரடக்சன்ஸ் சினிமா தயாரிப்பை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. ஆனால் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இனி அந்த படத்தை தயாரிக்குமா, அல்லது அதற்கு முன்பே தயாரிப்பை நிறுத்தி விடுமா என்பதும் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.





