இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்கள் மிகக் குறைவு தான். முதலில் இந்த சாதனையை எட்டிய திரைப்படம் அமீர்கானின் தங்கல் திரைப்படம். மல்யுத்தத்தை பற்றியும், அதில் சாதித்த வீராங்கனையின் வாழ்க்கையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் முதல் முறையாக ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனையை இந்த திரைப்படம் படைத்தது. இதன் பிறகு, இந்த பட்டியலில் இணைத்துக் கொண்டது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம். இப்போது வரை இந்த திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள்.
அந்த அளவுக்கு படத்தின் மீதான திரைக்கதையை கச்சிதமாக அமைத்து கைத்தட்டல்களை அள்ளினார் இயக்குனர் ராஜமவுலி. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் என்று கூறலாம். தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் இந்தி என அனைத்து திரையுலகிலும் இது சக்கை போடு போட்டது.
இப்படி, இந்தி மற்றும் தெலுங்கு சினிமாக்கள் உலக சினிமாவை கவனிக்க செய்ய, அதில் கன்னட படத்திற்கும் இடம் கொடுத்தார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதற்கு முன்பு வரை, தமிழ் தெலுங்கு இந்தி திரை உலகத்தை காட்டிலும் கன்னட திரையுலகம் குறைத்து மதிப்பிடப்பட்டு வந்த நிலையில், அந்த நிலைமையை மாற்றினார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
படத்தின் ஒவ்வொரு வசனத்தையும் கூர்மையாக எழுதிய அவர், அற்புதமாக காட்சி அமைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். படத்தின் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் யாருமே எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதிலும் இரண்டாம் பாகம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கல்லா கட்டியது.
இந்த நிலையில், பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கினார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் அவர் அடுத்ததாக, ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து இருக்கிறார். மைத்திரி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. தற்போதைக்கு இந்த திரைப்படத்தை என் டி ஆர் நீல் என்று அழைக்கிறார்கள். பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





