காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில், வாத்தியார் என்ற கேரக்டரில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விஜய் சேதுபதி. படத்தில் சில காட்சிகளே வந்தாலும் விஜய் சேதுபதி நடிப்பு, விடுதலை படத்தில் வேற லெவலில் இருந்தது. படத்தின் நாயகன் சூரி என்றாலும், நடிப்பில் வெளுத்து கட்டியது விஜய் சேதுபதிதான்.
விடுதலை படம் கடந்தாண்டு துவக்கத்தில் வெளியான நிலையில், ஆண்டு இறுதிக்குள் 2ம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர். ஆனால் கடந்தாண்டு முடிவடைந்து, இந்த ஆண்டிலும் 5 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் விடுதலை 2 படம் ஷூட்டிங் நடந்து வருகிறது.
விடுதலை 2ம் பாகத்தில், நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால் அவர்களுக்கான கிளைக் கதைகளை வெற்றிமாறன் அதிகமாக உருவாக்கி, படப்பிடிப்பை அதிக நாட்கள் நடத்தி தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. அதே வேளையில் விடுதலை 2 படத்தில் நடித்த சூரி, அதன்பிறகு கருடன், கொட்டுக்காளி என்ற 2 படங்களில் நடித்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே திடீரென விடுதலை 2 படத்தில், நடிகர் எஸ்ஜே சூர்யாவும் நடித்து வருவதாக ஒரு தகவல் பரவியது. விஜய் சேதுபதியும், நடிப்பு அரக்கன் என அழைக்கப்படும் ஒரே படத்தில், அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார்கள் என்றால், ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடிப்பார்களே என, ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியம் எழுந்தது.
ஆனால் விடுதலை 2 படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கவில்லை என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பும், சியான் விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பும் தென்காசியில்தான் நடக்கிறது. வீர தீர சூரன் படத்தில்தான் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார்.
ஆனால் விஜய் சேதுபதி தங்கியுள்ள அதே ஓட்டலில் எஸ்ஜே சூர்யாவும் தங்கியிருப்பதால் இருவரும் காலை, மாலை நேரங்களில் ஒன்றாக செல்வது, சாப்பிடுவது, வௌியில் செல்வது, மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் செல்வது போன்ற நேரங்களில் ஒன்றாக காணப்பட்டதால், இருவரும் விடுதலை 2 படத்தில் நடிக்கின்றனர் என்று பலரும் தவறான தகவலை பரப்பி விட்டுள்ளனர். உண்மையில், விடுதலை 2 படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கவில்லை. எஸ்ஜே சூர்யா வீரதீர சூரன் படத்தில் மட்டுமே உறுதி என தெரிய வந்துள்ளது.





