கடந்த ஆண்டில் பொங்கல் அன்று எச் வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் துணிவு படம் வெளியானது. அதன்பிறகு கடந்தாண்டில் ஒரு படமும் அஜீத் நடிப்பில் வெளியாகவில்லை. இந்த ஆண்டிலும் மே மாதம் கடக்க உள்ள நிலையில், அஜீத் படம் எதுவும் வரவில்லை. அவர் நடித்துள்ள விடாமுயற்சி படமும் பாதியில் நிற்கிறது. குட்பேட் அக்லி படப்பிடிப்பு இப்போதுதான் துவங்கியுள்ளது.
நடிகர் அஜீத்குமார் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த 9, 10ம் தேதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் துவங்கி நடந்தது. இரண்டு நாட்கள் சண்டை காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பில் நடந்த நிலையில், ஆந்திராவில் தேர்தல் நடந்ததன் காரணமாக, படக்குழு சென்னை திரும்பியது.
தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஐதரபாத் சென்றுள்ள குட்பேட் அக்லி படக்குழு தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஷூட்டிங் ஷெட்யூல் தொடர்ந்து 27 நாட்களுக்கு நடக்கிறது. அதன்பிறகு ஜூன் மாத இறுதியில், அஜீத்குமார் பாதியில் நின்றுள்ள விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக் கொள்கிறார்.
ஜூலை மாத இறுதி வரை விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்கிறது. அதில் மீதமுள்ள அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று படத்தின் டைரக்டர் மகிழ்திருமேனிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய இந்த படம், இந்த ஜூலைக்குள் நிறைவு செய்தாக வேண்டிய நெருக்கடி நிலையில் உள்ளது. ஏனெனில் மற்ற படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் அஜீத், திரிஷா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் உள்ளனர்.
அதனால் ஜூன் இறுதியில் துவங்கி, ஜூலை இறுதிக்குள் விடாமுயற்சி ஷூட்டிங்கை முழுமையாக நிறைவு செய்துவிட்டு அடுத்தகட்டமாக ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை தொடர்ந்து 3 மாதங்களுக்கு குட்பேட் அக்லி படப்பிடிப்பு நடக்கிறது. இந்த 3 மாத படப்பிடிப்புகளும் நடக்க இருப்பது ஜப்பான், லண்டன், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு 3 மாதங்களில் இந்த படத்தின் ஷூட்டிங்கை மொத்தமாக முடித்து விடுகிறார் அஜீத்குமார். அதன்பிறகு வரும் பொங்கலுக்கு, அதாவது வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதியன்று குட்பேட் அக்லி படம் ரிலீசாகிறது. அதாவது துணிவு படத்துக்கு பிறகு, இந்த படம் ரிலீசாக இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு, விடாமுயற்சி படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் முடிவடையும் பட்சத்தில், தீபாவளிக்கு அந்த படம் ரிலீசாக வாய்ப்புள்ளது.





