திரையுலகில் வைகைப்புயல் வடிவேலுவிற்கு இது இரண்டாவது ரவுண்டு என்று தான் கூற வேண்டும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தனது இருப்பை வடிவேலு தக்க வைத்திருக்கிறார். இருப்பினும் இந்த முறை தனது கதை தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார் வடிவேலு.
2000 முதல் 2010 வரை தமிழ் சினிமாவில் வடிவேலு இல்லாத திரைப்படங்களை நம்மால் பார்க்க முடியாது. அந்த அளவு படங்களை நடித்து தள்ளினார் வைகைப்புயல். அவரது நகைச்சுவையும் சரியாக எடுபட்டதால், அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
ரஜினி விஜய் அஜித் என எந்த நடிகர்கள் இருந்தாலும் அதில் வடிவேலு இருந்தால் படம் இன்னும் சற்று கூடுதலாக ரீச் ஆகும் என்று தயாரிப்பாளர்கள் எண்ணினர். அதற்கு ஏற்றார் போல அவர் நகைச்சுவையும் இருந்தது. சந்திரமுகி திரைப்படத்தில் தொடங்கி ஏராளமான படங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக வடிவேலு இருந்தார்.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், விஜயகாந்திற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வடிவேலு. அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அரசியலில் இறங்கிய அவர், விஜயகாந்தை பொதுவெளியில் தரக்குறைவாக பேசினார். ஆனால் இதையெல்லாம் விஜயகாந்த் கண்டு கொள்ளவே இல்லை. அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பயணித்த தேமுதிக, தனிப்பெரும் எதிர்க்கட்சியாக வளர்ந்தது.
இதன்பிறகு திரைப்படத்திலிருந்து நடிப்பதில் ஒதுங்கியே இருந்தார் வடிவேலு. அவ்வப்போது அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களும், சரியாக ரீச் ஆகவில்லை. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த அவர், இயக்குனர் சிம்பு தேவனுடன் ஏற்பட்ட மோதலால் படத்திலிருந்து பாதியில் விலகினார். இதனால் அதன் தயாரிப்பாளர் சங்கர் நீதிமன்றம் வரை சென்றார்.
இப்படியான சூழலில் வடிவேலுக்கு ரீ என்ட்ரியாக அமைந்தது மாமன்னன் திரைப்படம். தற்போது அவர் மாரிசன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ட்ராவலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஃபகத் ஃபாஸிலுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் மாரிசன் குறித்து பேசி இருக்கும் வடிவேலு, இப்படி ஒரு கதையை நான் கேட்டதில்லை என்று கூறியிருக்கிறார். பெண்கள், குடும்பங்கள் கொண்டாடும் கதையாக இது இருக்கும் என்றும், நிச்சயமாக இந்த திரைப்படம் அவார்டு வாங்கும் என்றும் வடிவேலு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.





