இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் மார்ச் மாத இறுதியில் வெளியான படம் விடுதலை. அடுத்த 6 மாதங்களில் இந்த படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், 20 மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 20ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.
மொத்தம் 257 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில், 120 நாட்கள் விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்து இந்த படத்தில் நடித்திருக்கிறார். மேலும் 450 பேர் இந்த படத்துக்காக இயக்குனர் வெற்றிமாறன் தலைமையில் பணிசெய்துள்ளனர். இன்னும் சில காட்சிகள் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் டிசம்பர் 20ம் தேதி படம் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை.
விடுதலை படத்தின் ஷூட்டிங் துவங்கிய போது திருமணம் செய்துக்கொண்ட சிலரது குழந்தைகள், இன்று பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர் என இயக்குனர் வெற்றிமாறனே, விடுதலை 2 இசை வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாக குறிப்பிட்டு பேசினார். அந்த அளவுக்கு மிக நீண்ட நாட்களுக்கு விடுதலை 2 படப்பிடிப்பு நீண்டுவிட்டது.
இந்நிலையில், நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவான படம் திரு மாணிக்கம். இந்த படத்தின் பிரிவியூ காட்சி சமீபத்தில் நடந்தது. அப்போது படம் பார்த்துவிட்டு வந்தவர்களிடம் நேரடியாக கருத்து கேட்காமல் அங்கிருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தில் படம் குறித்த கருத்தை எழுதுமாறு கூறப்பட்டுள்ளது. பலரும் படத்தை ஆஹா, ஓஹோ, பிரமாதம், அருமை என பாராட்டியுள்ளனர்.
இதையடுத்து திரு மாணிக்கம் படத்தை தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் வெளியிடும் உரிமத்தை வேறு ஒருவர் கேட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது தம்பி போஸ் ஆகியோர், நாங்களே இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியீடு செய்கிறோம் என அனுமதி பெற்றுள்ளனர்.
அதன்பிறகுதான், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம் ரிலீஸாகும் அதே நாளில் டிசம்பர் 20ம் தேதி திரு மாணிக்கம் படத்தை ரிலீஸ் செய்ய அவர்கள் திட்டமிட்டு அறிவித்துள்ளனர். ஏனெனில் விடுதலை 2 படம் வெளியாகும் அந்த நேரத்தில் வெளியாகும் மற்ற படங்கள் மீதும் ரசிகர்களின் கவனம் செல்லும். அப்போது இந்த படத்துக்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதால், டிசம்பர் 20ம் தேதி திரு மாணிக்கம் திரைக்கு வருகிறது.





