2019ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும், ரஜினியின் பேட்ட திரைப்படமும் ஒன்றாக களம் இறங்கியது. இயக்குனர் சிறுத்தை சிவா உடன் நான்காவது முறையாக அஜித் இணைந்த விஸ்வாசம் திரைப்படத்தை விட, கார்த்திக் சுப்புராஜ் ரஜினி கூட்டணியில் உருவான பேட்ட படத்திற்குதான் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பந்தயத்தில் நிச்சயம் ரஜினிதான் ஜெயிப்பார் என பலரும் எதிர்பார்த்து இருந்த வேளையில், தந்தை மகள் சென்டிமென்டை தூக்குத் துரையை வைத்து தூக்கலாக கொடுத்த சிறுத்தை சிவா, பொங்கல் ரேஸில் வெற்றி பெற்றார். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக விஸ்வாசம் அமைய, திரையரங்குகளுக்கு ஒரு பெருங்கூட்டமே படையெடுத்தது. இதைக் கவனித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தை எடுக்கும் வாய்ப்பை சிறுத்தை சிவாவிடம் ஒப்படைத்தார்.

குடும்பத் திரைப்படமாக இது அமைய வேண்டும் எனும் ரஜினியின் கட்டளைக்கு ஏற்ப, விறுவிறுப்பாக தயாரானது அண்ணாத்த திரைப்படம். அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி உள்ளிட்ட ஏராளமான நடித்தனர். ஆனால் படம் திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியை சந்திக்க ரஜினியின் திட்டமெல்லாம் தவிடு பொடியானது. இதன் பிறகு அடுத்த படத்தேர்வில் மிகவும் கவனமாக இருந்த ரஜினிகாந்த், டாக்டர் எனும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நெல்சனுக்கு தனது கால் சீட்டை கொடுத்தார்.
அந்த நேரத்தில்தான், விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனால் ரஜினி தன் முடிவை மாற்ற இருப்பதாகவும், விரைவில் அவர் வேறு ஒரு இயக்குனருடன் பணிபுரிய உள்ளார் என்றும் கூறப்பட்டது. ஆனால் எடுத்த முடிவிலிருந்து மாறாத ரஜினிகாந்த், நெல்சன் மேல் நம்பிக்கை வைத்து சூட்டிங் கிளம்பினார். தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளும் பரபரப்பாக நடைபெற, அதற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கிஜராஃப், நடிகைகள் தமன்னா ரம்யா கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் யோகி பாபு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே ஜெயிலரில் கூடியது. சமீபத்தில் வெளியான காவாலயா பாடலும் சூப்பர் ஹிட் அடிக்க, படத்தின் மீது ரசிகர்களுக்கு சின்ன நம்பிக்கை வந்தது. தமன்னாவின் எடுப்பான நடன அசைவுகளை கண்டு மயங்கிய ரசிகர்கள், காவாலயா பாடலுக்கு பச்சைக்கொடி காட்டினர்.
இதையடுத்து படத்தின் இரண்டாம் பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. டைகர்கா ஹுக்கும் எனத் தொடங்கும் அந்தப் பாடலின் ப்ரோமோவை, படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரஜினியின் காந்தக் குரலில் கர்ஜிக்கும் வசனங்கள் ஜெயிலரை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் சண்டை பயிற்சியாளர் கெவின் குமார், புதுப்புது அப்டேட்களை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசி இருப்பதாவது “தயவுசெய்து படத்திற்கு சீக்கிரம் வாருங்கள். முதல் காட்சியில் இருந்து பாருங்கள். இயக்குனர் நெல்சன் அற்புதமாக பணிபுரிந்துள்ளார். அவரது திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியும் பின்னிப் பிணைந்துள்ளது. ஒரு ஆக்ரோஷமான காட்சி வந்து போனதும், ஒரு அமைதியான சீன் பார்வையாளர்களுக்கு கிடைக்கும். கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தில் ரசிகர்கள் பயணித்ததை போல, இந்தப் படத்திலும் உணர்வார்கள்” என தெரிவித்துள்ளார். கெவின் குமாரின் தந்தை ஸ்டண்ட் சிவாவும் ஜெயிலர் படத்தில் பணியாற்றியுள்ளார். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.





