இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் கடந்தாண்டு அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கிய படம் விடாமுயற்சி. அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில் இன்னும் ஷூட்டிங் முடிவடையவில்லை.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போவதால் படம் ரிலீஸ் எப்போது என்பதில் தொடர்ந்து குழப்பமும் சந்தேகமும் நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய அந்த படத்தை பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்காத நிலையில், கடந்த ஜூன் மாத இறுதியில் துவங்கிய படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் நடந்து வருகிறது.
கடந்த ஆண்டில் ஜனவரி 14ம் தேதி அஜித்குமார் நடித்த எச் வினோத் இயக்கிய துணிவு படம் வெளியானது. அப்போது விஜய் நடித்த வாரிசு படமும் வெளியானது. வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த லியோ படம் கடந்த ஆண்டில் வெளியானது. இம்மாதம் 5ம் தேதி விஜய் நடித்த தி கோட் படமும் வெளியானது. நடிகர் விஜய் நடித்த 2 படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் இன்னும் அஜித் குமார் நடித்த படம் ஒன்று கூட ரிலீஸ் ஆகாதது, அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
விடாமுயற்சி ஷூட்டிங்கை விரைவில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்வார்கள் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி படத்தை மெருகேற்றுவதாக கூறி, பர்பெக்சன் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக திரும்பத் திரும்ப காட்சிகளை மாற்றி, திரும்ப திரும்ப சூட்டிங் நடத்தி தாமதித்துக் கொண்டே இருப்பதால் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போகிறது.
தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் இல்லை என்பது உறுதியான நிலையில், டிசம்பர் மாதம் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது டிசம்பர் மாதமும் ரிலீஸ் இல்லை. அதனால் அடுத்த ஆண்டில் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஜனவரி 10ம் தேதியும் இந்த படம் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
வரும் பொங்கலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர், அதனால் குட்பேட் அக்லி படம் ரிலீஸ் ஆன பிறகுதான், விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இப்படி ஒரு ஆண்டுக்கு மேலாக அஜித்குமார் நடித்து, முதலில் ஷூட்டிங் துவங்கிய படம் வெளிவராமல், அடுத்ததாக நடித்த படம் குட்பேட் அக்லி படம் முதலில் வெளிவருவது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி விடாமுயற்சி படம் தாமதமாக இயக்குனர் மகிழ் திருமேனியின் மெத்தனப் போக்கே காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.





