இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்தவர் துரை செந்தில்குமார். இவருக்கு முதல் திரைப்படமாக எதிர்நீச்சல் அமைந்தது. தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படத்தில், ஹீரோவாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். தனது திரையுலக பயணத்தில் தொடக்க காலத்தில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இந்த திரைப்படம் மிக முக்கிய காரணமாக இருந்தது. எதிர்நீச்சல் திரைப்படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வர ஆரம்பித்ததால், படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது இசையமைப்பாளர் அனிருத் மற்றும் துரை செந்தில் குமாரின் திரைக்கதை அமைப்பு.
இதன் பிறகு மீண்டும் துரை செந்தில்குமார் – தனுஷ் – சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்தது. இந்த முறை காக்கிச்சட்டை என்னும் பெயரில் ஆக்சன் திரைப்படத்தை கொடுத்தார் துரை செந்தில்குமார். சிவகார்த்திகேயனுக்கும் இது முதல் ஆக்சன் திரைப்படமாக அமைந்தது. விமர்சன ரீதியாக இது எதிர்பார்த்து அளவுக்கு இல்லை என்றாலும், வசூலில் கல்லா கட்டியது.
இதன் பிறகு தொடர்ந்து தனுசுடன் துரை செந்தில்குமார் இரண்டு திரைப்படங்களை எடுத்தார். இதில் முதல் திரைப்படம் கொடி. தனுஷ் முதன்முறையாக இரட்டை கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் அது. அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், ஓரளவு வரவேற்பை பெற்றது.
இதன் பிறகு மீண்டும் தனுசுடன் இணைந்த துரை செந்தில்குமார் இந்த முறை பட்டாஸ் படத்தை இயக்கினார். ஆனால் இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தில் வெற்றிமாறன் இணைந்து பணியாற்றிய துரை செந்தில் குமார், தனது குருநாதர் வெற்றிமாறன் கதையில் கருடன் திரைப்படத்தை இயக்கினார். சூரி சசிகுமார் மற்றும் உன்னிமுகுந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் தற்போது துரை செந்தில்குமார் அடுத்த திரைப்படத்திற்காக லெஜன்ட் சரவணன் உடன் இணைந்து இருக்கிறார். தனது சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரத்திற்காக முதலில் திரையில் தோன்றிய சரவணன் அண்ணாச்சி, படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். அதன்படி அவரது முதல் திரைப்படமாக, லெஜன்ட் வெளியானது. இது விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. இதனால் தனது அடுத்த திரைப்படத்திற்காக காத்திருந்தார் சரவணன் அண்ணாச்சி. மிகப்பெரிய இயக்குனர் உடன் தான் அவர் இணைய வேண்டும் என்று திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது துரை செந்தில்குமாரை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பும் தற்போது தொடங்கியுள்ள நிலையில், திரைப்படத்திற்கான சரவணன் அண்ணாச்சியின் கெட்டப் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.





