நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். சமீபத்தில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுடன் கல்வி விருது கவுரவித்தார். தி கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்க உள்ளார்.
சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் முதல் கட்டமாக 8 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனமும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு அஞ்சலி செலுத்த, சென்னைக்கு இன்று நேரில் வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு, தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், ஆம்ஸ்ட்ராங் படுகொைல சம்பவம் குறித்து, அறிக்கை ஒன்றை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி, தமிழக அரசுக்கும் விஜய் கோரிக்கை ஒன்றை வைத்திருப்பது, குறிப்பிடத்தக்கது. சட்டம் ஒழுங்கில் அதிக கவனம் செலுத்த அதில் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
அதில் விஜய் கூறியிருப்பதாவது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என்று அந்த பதிவில் விஜய் கூறியுள்ளார்.





