தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகி இருக்கிறது ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், செல்வராகவன், எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்திப் கிஷன், காளிதாஸ், சரவணன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உட்பட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரே முழு வீச்சில், ஆகஸ்ட் மாதத்திற்குள் ஷூட்டிங் பணிகளை நிறைவு செய்தார் தனுஷ். இதற்காக மொட்டை கெட்டப்பில் இருந்த அவர், கிழக்குக் கடற்கரை சாலையில் செட் போட்டு படப்பிடிப்பை எடுத்தார்.
படத்தில் அவர்தான் ராயன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருப்பினும் துஷாரா விஜயனுக்கே படத்தில் அதிக இடம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் எஸ் ஜே சூர்யாவும் உறுதி செய்தார். அதாவது படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும், ஒரு பின்னணி இருக்கும் என்று கூறிய அவர், துஷாரா விஜயன்தான் இதை சுமந்து செல்வார் என்று தெரிவித்தார்.
பட டைட்டில் கூட துஷாரா விஜயனுக்கு பிறகு தங்கள் பெயர்கள் வரும் என்று அவர் கூறியிருந்தார். இதனிடையே, ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற தனுஷ், ரசிகர்களுக்காகவே இந்த திரைப்படத்தை இயக்கி இருப்பதாக தெரிவித்தார்.
இதில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். ஏற்கனவே தனுஷ் இயக்கி இருந்த ப பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. காதல், முதியோரின் பாசம் என அனைத்தையும் கலந்து கட்டி அடித்திருந்த தனுஷின் இயக்கத்தை பலரும் ரசித்தனர். இதன் காரணமாகவே அவர் இயக்கத்தில் அடுத்து உருவாகி இருக்கும் ராயன் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படியான சூழலில் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு சண்டைக் காட்சிகள் தான் முக்கியம் என்பதை, ஒவ்வொரு ஃபிரேமிலும் தனுஷ் காட்டி இருக்கிறார். அது மட்டுமல்ல கதை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, ட்ரெய்லரில் அவர் எதையும் கூறவில்லை. அதில் இருந்தது முழுக்க முழுக்க சண்டை, சண்டை சண்டைதான். எதிர்பார்த்த அளவுக்கு ட்ரெய்லர் இல்லை என்று தான் இங்கு பலரும் கூறி வருகிறார்கள். கதை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தனுஷ் இப்படி செய்திருக்கலாம் என்று தெரிகிறது. வரும் 26 ஆம் தேதி ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.





