தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா, பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளியான 10 படங்களும் படுதோல்வியை சந்தித்தன. காப்பான் அஞ்சான் 24 பசங்க 2 தானா சேர்ந்த கூட்டம் சிங்கம் 3 எதற்கும் துணிந்தவன் மாசு என்கிற மாசிலாமணி கங்குவா உள்ளிட்ட 10 படங்களும் பிளாப் படங்களாக இருந்தன.
ஆனால் கொரோனா காலகட்டத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று ஆகிய 2 படங்களும் வணிகரீதியாக பெரிய வெற்றியை பெற்றன. இந்த படங்களும் நேரடியாக தியேட்டரில் ரிலீஸாகி இருந்தால் மற்ற படங்களின் தொடர் தோல்வி இந்த படங்களையும் பாதித்திருக்க அதிக வாய்ப்பிருந்தது.
இந்நிலையில் சூர்யா தனது 44வது படத்தில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்போது தனது 45வது படத்தில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். கோவையில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் திரிஷா, லப்பர் பந்து நடிகை சுவாசிகா நெடுஞ்சாலை பட நாயகி ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஜெய்பீம் எதற்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார். படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியும் வக்கீலாக நடிக்கிறார்.
இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோருடன் ஜெயராம் கருணாகரன் சுஜித் சங்கர் பிரகாஷ்ராஜ் நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு அந்தமான் கேரளா மூணாறு சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
ரெட்ரோ படத்தின் டீசர் கிறிஸ்மஸ் பண்டிகை தினமான கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது இந்த படத்தின் தலைப்பு ரெட்ரோ என்றும், இந்த படம் 2025ம் ஆண்டில் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரில் குளக்கரை ஒன்றில் பூஜா ஹெக்டேவுடன் சூர்யா பேசும் காட்சிகளும் இருந்தது. டீசரில் பூஜா ஹெக்டே பேசுவது போன்ற காட்சிகளும் வசனங்களும் இல்லை. அதனால் இந்த படத்தில் அவர் வாய் பேச முடியாத ஒரு கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





