ரஜினிகாந்த் தற்போது “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் மொய்தின் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

“லால் சலாம்” திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அதே போல் இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்த ஜூனியர் நடிகர்களுக்கு அநீதி நடந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது “லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறதாம். அங்கே ஒரு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்கினார்களாம்.

அந்த கிரிக்கெட் போட்டிக்கு ஆடியன்ஸ்களாக நடிக்க அந்த பகுதியில் உள்ள ஒரு 500 பேரை திரட்டி அழைத்து வந்திருந்தார்களாம். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.400 சம்பளம் என கூறப்பட்டதாம். ஆனால் அந்த காட்சியை படமாக்கிய பிறகு அவர்களது சம்பளத்தை கொடுக்கவில்லையாம். சில நாட்களில் அவர்களின் சம்பளத் தொகையை கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.
அதன் பின் மற்றொரு நாள் அதே போல் கிரிக்கெட் காட்சியை படமாக்கும்போது அவர்களை மீண்டும் அழைத்தார்களாம். ஏற்கனவே படக்குழுவினர் சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் அல்லவா, இந்த முறை இரண்டு நாட்களுக்கான சம்பளத்தை வாங்கிவிடலாம் என்று நினைத்து அவர்கள் சென்றிருக்கிறார்கள். ஆனால் அன்றும் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம். இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் “லால் சலாம்” படக்குழுவினர் தங்களை ஏமாற்றிவிட்டதாக வலைப்பேச்சு யூட்யூப் சேன்னலுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.





