நடிகர் விஜய் அரசியல் வருகையை யார் வெறுக்கிறார்களோ இல்லையோ, ஆளுங்கட்சியாக உள்ள திமுக பயங்கர அதிருப்தியில் இருக்கிறது. ஏனெனில் ஆளுங்கட்சியை தான் விஜய் எதிர்த்து அரசியல் களத்துக்குள் குதிக்கிறார். முதல்வர் நாற்காலியை குறி வைக்கிறார். அதனால் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தலைவலியாக இருக்கப் போகிறார்.
நடிகர் விஜயை பொருத்தவரை, அவரது அரசியல் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளம் வயதினர், கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் விஜய்க்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இது நிச்சயம் அவருக்கு பெரிய பலமாக அமையும்.
விஜயை பொருத்த வரை, சினிமா தந்த புகழும் செல்வாக்கும் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது. மற்ற நடிகர்களை போல சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகு அவர் அரசியலுக்கு வரவில்லை. தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் இருந்து, அதை தவிர்த்துவிட்டு அரசியலுக்குள் வந்துள்ளார்.
நடிகர் விஜயுடன் நாம் தமிழர் கட்சி இணையவும் அதிக வாய்ப்புள்ளது. அதனால் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, விஜயும் சீமானும் இணைந்து எதிர்கொள்ளும் பட்சத்தில் இன்னும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். ஏனெனில் மக்களுக்கு பணம் தராமல், பரிசுப் பொருட்கள் தராமல் அதிக ஓட்டுகளை வாங்கி வரும் கட்சி நாம் தமிழர் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவை பொருத்த வரை ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஸ்டாலின் தரப்பில் எந்த முயற்சியும் இல்லை. அடுத்து உதயநிதியை முதல்வராக்குவது, கருணாநிதிக்கு சிலை வைப்பது, அரங்கம் அமைப்பதை மட்டுமே தன் ஆட்சியின் இலக்காக அவர் செய்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில் கருணாநிதியின் மகளும், திமுக எம்பியுமான கனிமொழி நடிகர் விஜய் குறித்து பேசுகையில், விஜயை எனக்கு சின்ன வயதில் இருந்தே எனக்கு தெரியும், அவரது குடும்பத்துடன் எனக்கு பழக்கம் இருக்கிறது. தெளிவு மற்றும் கடின உழைப்பு இருந்ததால்தான் அவரால் சினிமாவில் இந்த இடத்துக்கு வர முடிந்தது. அதே போல் அரசியலிலும் பயணிக்க வேண்டும் என்று அவருக்கு நான் அட்வைஸ் கூறுவேன், என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





