தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக போற்றப்படுபவர் இளையராஜா. எனினும் இசையில் தான் அவ்வப்போது செய்யும் சில தகிடுதத்தங்களை, தில்லுமுல்லுகளை அவரே வேடிக்கையாக இசை கச்சேரிகளின் போது வெளிப்படையாக பேசி விடுவார். அதுபோல் அவர் மட்டுமே அறிந்த பல விஷயங்களை மேடைகளில் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
அபூர்வ சகோதரர்கள் படத்துக்கு, நான் பார்த்ததிலே அவர் ஒருத்தியை தான் என்ற அன்பே வா எம்ஜிஆர் பாடல் போல, இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்க, அந்த டியூனையே கொஞ்சம் மாற்றி, நல்ல மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா என்று டியூன் போட்டேன் என்று ஒரு நிகழ்ச்சியில் இளையராஜாவே கூறியிருக்கிறார்.
இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கார்த்திக் ராஜா, பல படங்களில் இளையராஜாவுடன் பணி செய்திருக்கிறார். சில படங்களுக்கு அவரே முழுக்க முழுக்க இசையைமத்துள்ளார். எனினும் டைட்டிலில் இளையராஜா பெயர்தான் வரும். அதில் வள்ளி, பாண்டியன் போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
மூத்த மகன் கார்த்திக் ராஜா, தன்னைப் போல இசையில் பெரிய ஆளாக வருவார் என இளையராஜா எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு மாறாக, அவரது இளைய மகன் யுவன் சங்கர் ராஜா தான் இப்போது இசைத்துறையில் முக்கிய இடத்தில் இருக்கிறார். கார்த்திக் ராஜா அந்தளவுக்கு இசையில் எதுவும் சாதிக்கவில்லை.
ஐந்து வயதிலேயே இசையமைக்கும் திறன் பெற்றவர் யுவன் சங்கர் ராஜா. அவர் போட்ட ஒரு மெட்டை காப்பியடித்துதான் பிரபு நடித்த ஆனந்த் படத்தில் வரும் பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று என்ற பாடலுக்கு நான் டியூன் போட்டேன் என்று இளையராஜாவே ஒருமுறை பேசும்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஐந்து வயதில் மகன் போட்ட மெட்டை தனது பாடலுக்கு பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜா.
அதுமட்டுமின்றி, யுவன் சங்கர் ராஜாவுக்கு பைலட் ஆக வேண்டும் என்பதுதான் சிறுவயதில் இருந்தே ஆசை. ஆனால் ஒருமுறை அவரது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, இப்போது இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தில் ஏஆர் ரகுமான் இருக்கிறார். இனி உன் அப்பா இசை எல்லாம் அவ்வளவுதான், என கிண்டலாக கூறியிருக்கின்றனர். அப்போது ஆவேசப்பட்ட யுவன் சங்கர் ராஜா, அதன்பிறகுதான் இசைத்துறையில் சாதிக்க ஆசைப்பட்டேன் என்று அவரே ஒரு நேர்காணலில் இந்த தகவலை கூறியிருக்கிறார்.





