தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக மதிக்கப்படும் நடிகர்கள் இருக்கின்றனர் என்றால் அது காமெடி நடிகர்கள்தான். கருப்பு வெள்ளை படங்கள் வந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசனுக்கு இணையாக சம்பளம் கேட்பாராம் காமெடி நடிகர் சந்திரபாபு. நாகேஷ் படங்களுக்கு தனியாக வரவேற்பும் இருந்திருக்கிறது.
அதன்பிறகு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடி கூட்டணி, தமிழ் சினிமாவை 1080-90களில் ஆட்சி செய்தது என்றால் அது மிகையல்ல. கவுண்டமணி பல படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கேரக்டரில் நடி்த்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக், பார்த்திபன் நடித்த படங்களில் கவுண்டமணி சத்தம்தான் மிக அதிகமாக இருக்கும்.
அதுபோல் விவேக், வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி என காமெடி நடிகர்களின் வருகையால் தமிழ் சினிமா ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்த காலகட்டங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இருக்கின்றன. இப்போது சந்தானம், சூரி போன்றவர்கள் ஹீரோக்களாக மாறிவிட்டால் யோகி பாபு காட்டில் வாய்ப்பு கொட்டி கிடக்கிறது.
ஆனால் பெரும்பாலான படங்களில் யோகிபாபு வரும் காட்சிகள் அப்படி ஒன்றும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும்படியாக இல்லை. வெறுமனே வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு கூட யோகிபாபு காட்சிகள் இல்லை என்பதே கசப்பான உண்மை. எனினும் அவருக்கான பட வாய்ப்புகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் மிக நல்ல படங்களை தந்தவர் சீனு ராமசாமி. குறிப்பாக தர்மதுரை, மாமனிதன், நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களை தந்தவர். இதில் 3 படங்கள் விஜய் சேதுபதி நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது யோகிபாபு முக்கிய கேரக்டரில், புதுமுகங்களுடன் நடித்த கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள டைரக்டர் சீனு ராமசாமி, அன்பானவர்களுக்கு வணக்கம். உங்கள் ஆதரவு நாடி, எனது இயக்கத்தில் 9வது படமாக கோழிப்பண்ணை செல்லத்துரை வருகிற செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரைக்கு வருகிறது எனத் தெரிவித்துள்ளார். சினிமா ஹவுஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். தேனி, பெரியகுளம் பகுதிகளில் இந்த படம் உருவாகி, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.





