நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை 22 படங்களில் நடித்து அந்த படங்கள் வெளியாகி இருக்கின்றன. இப்போது 23வது படமாக அமரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் சொந்த ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு முதலில் திட்டமிடப்பட்ட பட்ஜெட் ஒன்றாகவும், படப்பிடிப்பு முடிந்த பிறகு செலவு கணக்குகளை பார்த்த போது இருந்த பட்ஜெட்டும் பெரிய வித்யாசமாக இருந்துள்ளது. அதுவும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் அமரன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால், இந்த பட்ஜெட் உயர்வை பொருட்படுத்தாத தயாரிப்பாளர், நடிகர் கமல்ஹாசன் அமரன் படத்தை பார்த்துவிட்டு மிக உற்சாகமாக இருந்திருக்கிறார். மேலும் மேஜர் முகுந்த் வரதராஜனின் ஒரிஜினல் புட்டேஜ் காட்சிகளையும் இந்த படத்தில் சேர்த்துள்ளனனர்.
அதுமட்டுமின்றி மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தை நேரில் சந்தித்த கமல்ஹாசன், அவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுத்த வகையில், அவரது குடும்பத்தினரிடம் ரூ. 25 லட்சம் நிதியாக அளித்துள்ளார். அவர்கள் அந்த நிதியை வாங்க மறுத்த நிலையிலும், வற்புறுத்தி கமல் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமரன் படத்தை ஆரம்பத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் சோனி நிறுவனமும் இணைந்துதான் தயாரித்தது. ஆனால் கார்பரேட் நிறுவனம் என்பதால் அந்த நிறுவனத்தின் இன்டர்னல் ஆடிட் குழு சேர்ந்தவர்கள், காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பு தளத்துக்கு வந்து அடிக்கடி ஆய்வு நடத்தி உள்ளனர்.
அப்போது படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் தங்கியிருந்த அறைக்கு ரூ. 1.5 லட்சம் ரூபாயா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். காஷ்மீர் போன்ற பகுதிகளில் குறைந்த வசதிகள் கொண்ட அறைகளுக்கே அதிக வாடகை என்ற நிலையில், ஒரு சிறிய அறையில் போதிய வசதிகள் அற்ற நிலையில் அங்கு சிரமத்துடன் சிவகார்த்திகேயன் தங்கி இருந்திருக்கிறார். இதை எல்லாம் அறிந்த பிறகுதான், இவர்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது என கமல் முடிவு செய்திருக்கிறார். அமரன் படத்துக்காக சோனி நிறுவனம் முதலீடு செய்த ரூ. 24 கோடியுடன், ரூ. 12 கோடி பிராபர்டியாக கொடுத்து தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களை கும்பிடு போட்டு அனுப்பி விட்டார் என்று தெரிய வந்துள்ளது.





