அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் தொடர்பான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடிக்கிறார். அர்ஜுன் ரெஜினா ஆரவ் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
அங்கு, சாலைப் பகுதியிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் அஜித் இளமையான தோற்றத்துடனும் நடிக்கிறார். அது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் படத்தில் அஜித் மற்றும் ஆரவ் இருவரும் விபத்தில் சிக்குவது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருந்தது.
இதில் அஜித் வேகமாக காரை இயக்கும் போது, சாலையில் இருந்து தடுமாறி வாகனம் விழும் காட்சியை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இனிமேல் இதுபோன்று அஜித் ரிஸ்க் எடுக்க வேண்டாமே என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இது ஒரு பக்கம் இருக்க அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் பணிகள் முடிவு பெற்றன.
தொடர்ந்து இறுதிக் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அஜித்தின் மனைவியான த்ரிஷாவை, வில்லன் கும்பல் கடத்திச் செல்வதும், அவர்களை அஜித்குமார் தேடிப் போவதும் தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இதில் பல த்ரில்லர் சீன்களை தனக்கே உண்டான பாணியில் மகிழ் திருமேனி வைத்திருக்கிறாராம்.
இதில் அர்ஜுனுக்கு ஜோடியாக ரெஜினா நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரவ்வும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறாராம். இதனிடையே விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து அப்டேட் வெளியாகவே இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, தொடர்ந்து பல்வேறு தகவல்களை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து வருகிறது.
ஆனால் அது அனைத்துமே ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயமாக இருப்பது தான் இங்கு சலிப்பூட்டும் அப்டேட் ஆக இருக்கிறது. அஜித் திரிஷாவை தொடர்ந்து, அர்ஜுன் ரெஜினா ஆரவ் ஆகியோரின் புகைப்படங்களை மட்டும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது மலையாள நடிகர் நிகில் நாயரும் படத்தில் இணைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறும் போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வெளியாவதாக கூறிக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்கள், எப்போது டீசர் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.





