நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கங்குவா 2ம் பாகமாக உருவாகும் என்றும், அதில் சூர்யாவின் தம்பி கார்த்தி பிரதான வில்லன் கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமா தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் மிக ஆர்வமாக, ஆழமாக பயணிக்கிறது என்பதை பல முன்னணி நடிகர்களின் படங்களை பார்த்தாலே தெரிகிறது. பிரமாண்டம், தொழில்நுட்பம் என்ற 2 விஷயங்களை மட்டுமே பிரதானமாக நினைக்கும் ரசிகர்கள், கதையில் கோட்டை விட்டு விடுகின்றனர்.
வித்யாசமான கதைக்களங்களில் படங்களை உருவாக்கும் ஆக்கபூர்வமான படைப்பாளியாக தன்னை நினைத்துக்கொள்ளும் சில இயக்குனர் இயக்கும் சில படங்களை பார்க்கும்போது, இப்படி ஒரு விபரீத முயற்சி அவர்களுக்கு தேவையா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அப்போது வெல்லம் சாப்பிட வந்தவர்களுக்கு இரும்பை கடித்து சுவைக்க சொல்வது போல் இருக்கிறது.
சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் தங்கலான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தங்க வயலில் பணிசெய்த அடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையை சொல்லும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
காரணம், தங்கலான் படத்தில் பல இடங்களில் நடிகர் நடிகைகள் பேசும் வசனங்கள் சுத்தமாக புரியவில்லை. படத்தின் கதை நடந்த காலகட்டத்தில் அப்படிதான் அவர்கள் பேசிக்கொண்டார்கள், அப்படிப்பட்ட மொழியும் வார்த்தைகளும்தான் அந்த காட்சியில் வசனங்களாக பேசப்படுகின்றன என்றாலும், இப்போது உள்ள ரசிகர்களுக்கு அந்த வசனங்கள் புரிந்தால்தானே கதை புரியும், படத்தை உணர்ந்து தெளிவாக பார்த்து ரசிக்க முடியும்.
இப்படி விக்ரம் படத்தில் பா ரஞ்சித் செய்த அதே தவறு இப்போது சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா படத்திலும் ஏற்பட்டுள்ளது. கங்குவா படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி வெர்சன்களில் பல இடங்களில் கேரக்டர்கள் பேசும் வசனங்களே தெளிவாக இல்லை. அதனால் கதை வசனம் புரியாமல் படம் பார்த்தால் ரசிகர்கள், தலையை பிய்த்துக்கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போதே இந்த பிரச்னைக்கு தீர்வு காண டைரக்டர் சிறுத்தை சிவா முன்வர வேண்டும்.





