நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். 1990 களில் வெளியான பாட்ஷா படம் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் தந்த தோல்வியால் சோர்ந்து போயிருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஜெயிலர் படத்துக்கு கிடைத்த அமோகமான வரேவற்பும் வெற்றியும் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை கொடுத்தது. அதனால் வேட்டையன், கூலி, ஜெயிலர் 2 என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஜெயிலர் வெற்றியை பாராட்டும் விதமாக படக்குழுவினருக்கு தங்க நாணயங்களை பரிசளித்தது. நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு ரூ. 1.5 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார்களை பரிசளித்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.
இதுவரை நடிகர் ரஜினிகாந்த் இதுவரை அவர் நடித்த எந்த படத்திலும் 2ம் பாகத்தில் நடித்தது இல்லை. ஆனால் அவரது கொள்கைக்கு மாறாக ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க சம்மதிக்க காரணம், அந்த படம் அடைந்த பிளாக்பஸ்டர் வெற்றிதான். கலாநிதி மாறனே, ஜெயிலர் 2ம் பாகம் பண்ணலாம் என்று கேட்டதால், உடனே ரஜினிகாந்த் ஓகே சொல்லிவிட்டார்.
ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது அனிருத் இசைதான். பின்னணி இசையிலும், பாடல்களிலும் அவர் காட்டிய மேஜிக் படத்தை வேற லெவலில் கொண்டு சென்றது. குறிப்பாக தமன்னா குத்தாட்டம் போட்ட காவாலா பாட்டு, ஜெயிலர் படத்துக்கு மிகப்பெரிய பிரமோவாக அமைந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஜெயிலர் படம் உருவான கதை குறித்து படத்தின் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் பேசினர். அப்போது அனிருத் கூறுகையில், காவாலா பாடலில் ஹா ஹா ஹா ஹா என்று வரும். அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்தனர். அந்த விஷயத்தை குடியிருந்த கோவில் எம்ஜிஆர் படத்தில் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில்தான் சுகம் என்ற அந்த பாடலில் வரும் ஆ ஆ ஆ ஆ என்பதை வைத்துதான் உருவாக்கினேன். சின்ன வயதில் இருந்தே அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த ஆ ஆ ஆ ஆ என்பது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதைதான் காவாலா பாடலில் ஹா ஹா ஹா ஹா என பயன்படுத்தினேன் என்று கூறியிருக்கிறார்.





