தனது ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா மிகப்பெரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் நடுவே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பங்கேற்று பலரது இதயங்களை வென்றார். கமல் விட்டுச் சென்ற இடத்தை இவர் நிரப்புவாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த சூழலில், அதற்கு சரியாக தொகுத்து வழங்கி பதிலளித்தார் விஜய் சேதுபதி.
இதனைத் தொடர்ந்து தற்போது அவர் படங்களில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ட்ரெயின் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இதனை கலைப்புலி எஸ் தானு தயாரித்திருக்கிறார். சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது.
இதன்பிறகு ஏஸ் என்னும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஆறுமுக குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. நயன்தாரா தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கப் போவதாகவும் பலர் கூறினார்கள்.
ஆனால் இதன் அடுத்த கட்ட தகவல் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. இது ஒரு பக்கம் இருக்க தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. நித்யா மேனன் இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இது போன்ற சப்ஜெக்ட்களில் பாண்டியராஜ் அடித்து ஆட கூடியவர் என்பதால் இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. முழுக்க முழுக்க திருச்சி மற்றும் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலேயே இதனை படமாக்கி வருகிறார்கள்.
தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறதாம். கிட்டத்தட்ட 35 நாட்கள் அங்கு சூட்டிங் நடைபெறும் என்று கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தூண்டி கருப்பசாமி கோயிலிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறதாம். இது இயக்குனர் பாண்டியராஜின் குலதெய்வ கோயில் என்றும் கூறுகிறார்கள். அனேகமாக கோடை விடுமுறையில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





