தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய திரை உலகமே தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தி கோட். விஜய் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார்.
மங்காத்தா மாநாடு என பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த வெங்கட் பிரபு இதனை இயக்கியிருக்கிறார். படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், வி டி வி கணேஷ், பிரேம்ஜி அமரன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருப்பது இங்கு பெரும்பாலானோருக்கு தெரியும். இதில் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜயை இளமையாக காட்டுவதற்காக வெளிநாடு சென்று ஏஐ தொழில்நுட்பத்தை படக்குழு கையில் எடுத்தார்கள். ஆனால் அது சரியாக வரவில்லை என்று ஸ்பார்க் பாடலை பார்த்த ரசிகர்கள் கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து ட்ரெய்லரில் மகன் விஜய் கதாபாத்திரத்தை சரியாக சித்தரிப்பதற்காக சில பணிகளில் படக்குழு ஈடுபட்டது. இதன் காரணமாக ட்ரெய்லர் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது என்று வெங்கட் பிரபு கூறினார். மேலும் தற்போது நீங்கள் ட்ரெய்லரில் பார்க்கும் விஜய் தான் படம் முழுக்க வருவார் என்றும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை பெரிய அளவு ஈர்க்கவில்லை. அதேசமயம் ட்ரெய்லர் வெளியாகி அவர்களின் அதிர்ச்சியை சற்று குறைக்கும் வகையில் அமைந்தது. இப்படியான சூழலில் வரும் ஐந்தாம் தேதி படம் வெளியாக இருப்பதால் அதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலுமே, கோட் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் என்ற நிறுவனம்தான் இதனை ரிலீஸ் செய்கிறது. இந்த நிலையில் அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் படத்திலிருந்து புதிய பாடல் ஒன்று வெளியாகும் என்று வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். அனேகமாக அது திரிஷா நடனமாடும் பாடலாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள். இதனால் இந்தப் பாடலுக்கு இப்போதே எதிர்பார்க்கும் எகிறி இருக்கிறது.





