எப்போதுமே ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்ற பெரிய நட்சத்திர நடிகர்கள் படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகர்களின் படங்கள் ரிலீசை தள்ளி வைப்பதுதான் வழக்கம். ஏனென்றால் போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது. மேலும் பெரிய நடிகர்களின் படங்களை விரும்பும் ரசிகர்கள் மற்ற படங்களுக்கு வராமல் தவிர்த்து விடுவார்கள்.
இதனால் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாகவே இருந்தாலும் எதிர்பார்த்த வசூலும் வரவேற்பும் படங்களுக்கு கிடைக்காது என்பதும் கசப்பான உண்மை. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ் என்பதில் குழப்பம் இன்றும் நீடிக்கிறது.
இந்நிலையில் வருகிற மே மாதம் 14ம் தேதி நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த படம் டிஜிட்டல் சாட்டிலைட் ரைட்ஸ் விற்காத நிலையில் பலவித தடைகளை கடந்து இப்போதுதான் திரைக்கு வருகிறது.
மேலும் நடிகர் பிரபுதேவா நடித்த ஏஆர் ரகுமான் இசையமைத்த மூன்வாக் என்ற படம் வருகிற மே 15ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஏஆர் ரகுமான் பிரபுதேவா கூட்டணியில் உருவான இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கருப்பு படம் காரணமாக இந்த படம் ரிலீஸ் ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த சசி இயக்கிய நுாறு சாமிகள் படம் வருகிற மே 15ம் தேதி ரிலீஸ் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 14ம் தேதி கருப்பு படம் ரிலீஸ் ஆனாலும் மறுநாள் 15ம் தேதி நுாறு சாமிகள் படத்தை வெளியிட விஜய் ஆண்டனி துணிச்சலாக முடிவெடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் ஒருவேளை ஜனநாயகன் படம் வருகிற மே முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகும் பட்சத்தில் நிச்சயமாக நூறு சாமிகள் படம் ரிலீஸ் தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் விஜய் படம் ரிலீஸ் நேரத்தில் மற்ற படங்கள் களத்தில் இருந்தால் பலத்த நஷ்டத்தை சந்திக்கும். ஒருவேளை கருப்பு படமும் கூட ரிலீஸ் தள்ளி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்பதை கோலிவுட் வட்டாரமே ஆவலாக எதிர்பார்க்கிறது.





