நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத், விசாகபட்டணம் என முக்கிய நகரங்களில் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் நடத்தி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தெரிய வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பது உறுதியானது.
இப்போது அதே கன்னட படவுலகை சேர்ந்த நடிகை ரச்சிதா ராம் என்பவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சவுபின் சாகிர் என்பது நடிப்பது உறுதியாகி விட்டது.
இரு தினங்களுக்கு முன்பே, நாளை மறுதினம் (29ம் தேதி முதல்) கூலி படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அறிமுகம் ஆரம்பமாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில் இப்போது கூலி படத்தில் நடிக்கும் கேரக்டர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ரச்சிதா ராம், சவுபின் சாகிர் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியான நிலையில் இப்போது தெலுங்கு படவுலகை சேர்ந்த ஸ்டார் நடிகர் ஒருவரும் கூலி படத்தில் நடிப்பது உறுதியாகி விட்டது. அதை லோகேஷ் கனகராஜ் இன்று மாலை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு முறைப்படி அறிவித்துள்ளார்.
இன்று 65வது பிறந்த நாள் கண்ட நடிகர் நாகர்ஜூனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர் வெளியிட்ட கூலி படக்குழு சார்பில், இந்த படத்தில் நாகர்ஜூனா சீமோன் என்ற கேரக்டரில் நடிக்கிறார் என்பதை அறிவித்துள்ளது. நாகர்ஜூனா ஏற்கனவே ரஜினியின் மருமகன் தனுஷூடன் குபேரா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கூலி படம் பான் இந்தியா படமாக உருவாகி வருவதால் கன்னடம், மலையாளம், தெலுங்கு என முன்னணி நடிகர்களை முக்கியமான கேரக்டர்களில் கூலி படத்தில் நடிக்க வைத்து, படத்தை வேற லெவலில் உருவாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதில் இந்தி நடிகர் அமீர்கானும் கூலி படத்தில் நடிப்பதாக தகவல் பரவிய நிலையில், அதையும் லோகேஷ் கனகராஜ் விரைவில் உறுதிப்படுத்த வாய்ப்புள்ளது. ரஜினி படத்தில் தொடர்ந்து ஸ்டார் ஹீரோக்கள் இணைவது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.





