நாக் அஸ்வின் இயக்கத்தில் “ப்ராஜெக்ட் கே” என்கிற தற்காலிக பெயரில் அழைக்கப்பட்டு வந்த படத்திற்கு இன்று “கல்கி 2898 AD” என பெயரிடப்பட்டு அந்த டைட்டில் வீடியோவும் வெளியாகி இருந்தது. இந்திய சினிமாவில் மிகப்பெரிய படைப்பாக பார்க்கப்படும் இந்த “ப்ராஜெக்ட் கே”இந்திய மதிப்பில் சுமார் 600 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருக்கிறது.

பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமலஹாசன், பசுபதி, திஷா பதானி என்கிற பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணையவுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஒன்றான இந்த கல்கி 2898 படத்தின் போஸ்டரையும் சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
இவ்வேளையில் அமெரிக்காவில் சாண்டியாகோ நகரில் நடைபெற்று வரும் சர்வதேச மாநாட்டில் இந்த படம் குறித்த பல அப்டேட்டுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமலஹாசன், பிரபாஸ் உட்பட படக் குழுவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது அமிதாப்பச்சனை பற்றி பேசிய கமலஹாசன் :

அமிதாப்பச்சன் ஜி வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதில் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று கூறினார். இதற்கு வீடியோ கால் மூலமாக பதிலளித்த அமிதாப் பச்சன் : இவ்வளவோ அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். எங்கள் அனைவரையும் விட நீங்கள் பெரியவர் என்று நகைச்சுவையாக பேசினார். அதோடு “கல்கி 2898 படம் குறித்த சில தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
“கல்கி 2898” AD படம் கிபி 2898 ஆம் ஆண்டில் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. சயின்ஸ் பிக்சன் படமான இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் ரோலில் நடிப்பதாகவும், அதற்காக அவருக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரிக்க இந்த படத்தை 2024 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





