நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வாரம் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வெளிவந்தது. உலகம் முழுவதும் முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்தது. தமிழ்நாட்டில் மட்டும் 38 கோடி ரூபாய் வசூல் அள்ளியது. ஆனால் லியோ படம் முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய் வரை இருந்ததால், தி கோட் சற்று ஏமாற்றமே அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தி கோட் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 125 கோடிக்கு மேல் ஒரு வாரத்தில் வசூல் அள்ளியுள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் பெரிய அளவில் தி கோட் வசூல் அள்ளவில்லை. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் தி கோட் படம் பெரிய வரவேற்பு இல்லை.
இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தி கோட் படம் பிளாப் ஆனதற்கு முக்கிய காரணம், படத்தில் சிஎஸ்கே அணியை காட்டியதுதான். மும்பை, பெங்களூரு அணிகளை சேர்ந்த ரசிகர்களுக்கு தி கோட் அதனால் கூட பிடிக்காமல் போயிருக்கலாம். அதற்காக சிஎஸ்கே அணி ரசிகனாக, என் ரத்தத்தில் ஊறிய விஷயத்தை விட்டுவிட முடியாது என்று கூறியிருந்தார்.
அதே போல் சென்னையில் மட்டும் இதுவரை 11 கோடி ரூபாய் வரை, தி கோட் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ. 97 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. கடந்த 7 நாட்களில் மொத்தம் 320 கோடி ரூபாய் வரை தி கோட் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்கள், ஓணம், மிலாடி நபி பண்டிகை நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி கோட் படம் ரூ. 1000 கோடி வரை வசூலிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், 500 கோடி ரூபாயை கடப்பதே சிரமம் என்றுதான் கூறப்படுகிறது. இதற்கு காரணம், படத்தில் இளையதளபதி அதாவது மகன் விஜய் கேரக்டர் மட்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மற்றபடி அப்பா, மகன் சண்டை கதை எல்லாம் 1980களிலேயே வந்துவிட்டதாக கலாய்த்து வருகின்றனர்.
எனினும் தி கோட் படத்தை ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கு இந்த படம் லாபமா, நஷ்டமா என்று கேட்டால், இதுவரை தியேட்டர்கள் வசூல் 320 கோடி ரூபாயை கடந்துள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 120 கோடிக்கு ஓடிடி உரிமம் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமத்தை ஜீ நெட் ஒர்க் ரூ. 90 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆடியோ உரிமம் ரூ. 20 கோடி வரை விற்றுள்ளதாக தெரிகிறது. எனவே தி கோட் 500 கோடி ரூபாய் கடந்தாலே, தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 100 கோடி வரை லாபம்தான் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.





